ஆந்திராவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு இலவச மாக ஆழ்துளைக் கிணறுகள் தோண்டி, அதற்கு மோட்டாரும் பொருத்தி தரப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று முன்தினம் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் கள் மற்றும் வேளாண் துறை அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத் தினார். அப்போது அவர் பேசியதாவது:
மாநிலம் முழுவதும் உள்ள தகுதியான விவசாயிகள் அனைவருக்கும் இலவசமாக ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, அதற்கு மோட்டாரும் பொருத்திதரப்படும். இதற்காக ‘ஒய்எஸ்ஆர் ஜலகளா’ திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.இதன் மூலம் மாநிலத்தில் உள்ள சுமார் 5 லட்சம் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பயன் பெறுவர். இதற்காக, ஆந்திர அரசு ரூ.2,340 கோடி செலவு செய்யவுள்ளது. மோட்டார்களுக்காக கூடுதலாக மேலும் ரூ.1,600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் வேளாண் துறை அதிகாரிகள் விண்ணப்பித்த விவசாயியை அணுகி அவரது நிலத்தை ஆய்வு செய்து அங்கு ஆழ்துளைக் கிணறு வெட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
ஏற்கெனவே விவசாயத்திற்காக தினமும் 9 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் ‘ஜனதா பஜார்’ கொண்டு வரப்படும். இங்கு விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை அவர்களே விலை நிர்ணயம் செய்து வெளிச் சந்தையினருக்கு விற்பனை செய்யலாம்.
இவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.