உத்திரப்பிரதேசத்தை ஆளும் பாஜக அரசு மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை 2020 அமலாக்குகிறது. இதில், பள்ளிப் புத்தகங்களை குறைந்த்து தொழில் சார்ந்த பாடங்கள் அறிமுகம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உ.பி.யில் புதிய கல்விக் கொள்கையை அமலாக்க துணை முதல்வர் தினேஷ் சர்மா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இதன் கூட்டம் இன்று லக்னோவின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இதில் அடுத்த 2021-22 கல்வியாண்டில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அமலாக்குவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் அனைத்திலும் அடுத்த கல்வியாண்டு முதல் புதிய கல்விக் கொள்கை அமலாக்கப்பட உள்ளது.
இதன்மூலம் பள்ளிக் குழந்தைகளின் பாட நூல்கள் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் ரீதியானப் பாடங்களுக்கும், மொழிக் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.
இது குறித்து உ.பி. உயர் கல்வித்துறையின் கூடுதல் தலைமை செயலாளரான மோனிகா எஸ். கர்க் கூறும்போது, ‘‘உள்ளூரின் தேவையை பொறுத்து கல்விப் பாடங்கள் மாற்றி அமைக்கப்படும். பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவினருக்காக சிறப்பு கல்வித் திட்டமும் அமலாகிறது.’’ எனத் தெரிவித்தார்.
சிறந்த மாணவர்களுக்கு அரசு சார்பில் சிறப்பு தொழில்நுட்ப உதவியும் வழங்கப்பட உள்ளது. அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைகழக அங்கீகாரம் இன்றி சுயமாக தன்னாட்சி முறையில் செயல்படும்படி மாற்றி அமைக்கப்படுகின்றன.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அமலாக்குவதில் உபி அரசு அதிக தீவிரம் காட்டுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் முதலாவதாக இதை முதல்வர் யோகி ஆதித்யநாத் அமலாக்கத் திட்டமிட்டுள்ளார்.