இந்தியா

லோகியாவின் கொள்கைகளை கெடுத்தவர்கள் நிதீஷ், லாலு மீது ஜேட்லி புகார்

பிடிஐ

பிஹார் சட்டப் பேரவை தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி 5 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கும், நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் நேற்று பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற பாஜக இளைஞரணி நிகழ்ச்சியில் பேசிய ஜேட்லி இது தொடர்பாக கூறியது:

கடந்த 25 ஆண்டுகளாக பிஹாரில் லாலுவும், நிதிஷும்தான் ஆட்சியில் இருந்தனர். ஆனால் மாநிலம் இன்னும் மிகவும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது.

சோஷலிசவாதி ராம் மனோகர் லோகியாவின் பெயரைக் கூறி அரசியல் நடத்தி வரும் லாலுவும், நிதிஷும் அவரது கொள்கைகளை கெடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளனர். காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் போய் அமர்ந்து கொண்டு கூட்டாக பேட்டியளிக்கின்றனர். காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே பல மாநில பேரவைத் தேர்தலில் மண்ணைக் கவ்வி விட்டது. இப்போது மீண்டும் ஒரு தோல்வி அவர்களுக்கு காத்திருக்கிறது.

பிஹார் மாநில வளர்ச்சி குறித்து விவாதம் நடத்த பிரதமர் மோடியை நிதீஷ் அழைப்பது வேடிக்கையாக இருக்கிறது.

மோடி முதல்வராக இருந்த குஜராத் மாநிலம் உலக வங்கியின் வளர்ச்சி அறிக்கையில் முன்னணியில் உள்ளது. ஆனால் பிஹாருக்கு 21-வது இடத்தைத்தான் நிதீஷ் பெற்றுத் தந்துள்ளார். மாநிலத்தை யார் முன்னேற்றியுள்ளார்கள் என்பதை புள்ளி விவரங்கள் தெளிவாக தெரிவிக்கின்றன. அதற்கு மேல் விவாதிக்க என்ன இருக்கிறது.

மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியைப் போல பிஹார் பேரவைத் தேர்தலிலும் பாஜக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

SCROLL FOR NEXT