தேசிய தலைநகர் பகுதி திட்ட வாரியம் ரூ 31,000 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு ரூ 15,000 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
திட்டங்களின் வளர்ச்சியைக் கண்காணிப்பதிலும், கடன்களை நிர்வகிப்பதிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்த டிஜிட்டல், கைபேசி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் திட்ட மேலாண்மை தகவல் அமைப்பு (பி-எம்ஐஎஸ்) ஒரு முக்கிய நடவடிக்கை என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக செயலாளர் துர்கா சங்கர் மிஷ்ரா கூறினார்.
புதுடெல்லியில் இன்று நடைபெற்ற தேசிய தலைநகர் பகுதி திட்ட வாரியத்தின் திட்ட மேலாண்மை தகவல் அமைப்பின் தொடக்க விழாவில் பேசிய அவர், கோவிட்-19 சமயத்தில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்திருப்பதால், இந்தத் தளம் சரியான நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
திட்ட மேலாண்மை தகவல் அமைப்பை செயல்படுத்தியதற்காக தேசிய தலைநகர் பகுதி திட்ட வாரியத்தைப் பாராட்டிய அவர், இதன் மூலம் பகுதி வாரியான திட்டங்களுக்கு அதிக கவனம் கிடைக்கும் என்றார்.
ரூ 31,000 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு ரூ 15,000 கோடி கடன் வழங்க தேசிய தலைநகர் பகுதி திட்ட வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது என்றும் துர்கா சங்கர் மிஷ்ரா கூறினார்.