இந்தியா

தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்காவிட்டால் மெகா கூட்டணி உடைந்து 3-வது அணி உருவாகும்: லாலு கட்சிக்கு காங்கிரஸ் எச்சரிக்கை

ஆர்.ஷபிமுன்னா

மெகா கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டை விரைந்து முடிக்குமாறு லாலு பிரசாத் யாதவ் கட்சியை காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. தாமதித்தால் கூட்டணி உடைந்து மூன்றாவது அணி உருவாகும் என எச்சரித்துள்ளதாகத் தெரிகிறது.

பிஹாரில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையிலான மெகா கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா சமீபத்தில் வெளியேறியது. இதைத் தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சரான உபேந்திரா குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் சமதா தளமும் (ஆர்எல்எஸ்பி) வெளியேறத் தயாராகி விட்டது. லோக்தாந்திரிக் ஜனதா தளம் கட்சியின் சரத் யாதவும் மெகா கூட்டணியிலிருந்து விலகும் சூழல் தெரிகிறது.

ஐக்கிய ஜனதா தளம் தலைவராக இருந்த சரத், கடந்த 2018-ல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் இணைந்ததை எதிர்த்து அக்கட்சியில் இருந்து வெளியேறியவர். இவரைப்போல, சிறிய கட்சிகளும் வெளியேறி விடாமல் தடுக்கும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. இவர்களுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது குறித்து பேசிய காங்கிரஸ் அதன் முடிவுகளை ஆர்ஜேடியிடம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ’இந்து தமிழ்’ நாளேட்டிடம் பிஹார் காங்கிரஸ் நிர்வாகிகள் கூறும்போது, "விகாஸ் இன்ஸான் கட்சி, தேசியவாத காங்கிரஸ், சரத் யாதவ் கட்சி மற்றும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுடனும் பேசினோம். இவர்களிடம் தேஜஸ்வி பேசினால் பிரச்சினையாகிறது என்பதால் அதில், நாங்கள் தலையிட்டோம். இதன் மீது லாலு விரைவில் முடிவு எடுக்காவிட்டால் அனைவரும் கூட்டணியில் இருந்து வெளியேறி மூன்றாவது அணியை உருவாக்கி விடுவோம் என எச்சரித்தும் உள்ளோம்" என்றனர்.

கால்நடை தீவன வழக்கில் தண்டிக்கப்பட்டு ராஞ்சி சிறையில் உள்ள லாலுவை அவரது மகன் தேஜஸ்வி சந்திக்க உள்ளார். இதன் பிறகே இறுதி நிலவரம் தெரியவரும் நிலை உள்ளது. அதேசமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உறுப்பினரான மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் மகனும் எம்.பி.யுமான சிராக் பாஸ்வான் தொடர்ந்து முதல்வர் நிதிஷ் குமாரை விமர்சித்து வருகிறார். நிதிஷ் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் தனது லோக் ஜன சக்தி வேட்பாளர்களை நிறுத்தப் போவதாகவும் மிரட்டி வருகிறார்.

இதனால், ஆர்எல்எஸ்பி, ஹைதராபாத் எம்.பி.யான அசாதுதீன் ஒவைஸி கட்சி மற்றும் ஆர்ஜேடியின் முன்னாள் எம்.பி. பப்பு யாதவ் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து மூன்றாவது அணி உருவாக்கவும் பாஸ்வான் திட்டமிட்டு வருகிறார். இதைத் தடுக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. இதில், ஆர்எல்எஸ்பிக்கு தொகுதி ஒதுக்காமல் அதன் தலைவர் குஷ்வாஹாவுக்கு காலியாக இருக்கும் பிஹாரின் வால்மீகிநகர் மக்களவை தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT