பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் லாலு பிரசாத்தின் ஆதிக்கம் முடிவிற்கு வந்திருப்பது போல் தெரிகிறது. இவரது கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) பிரச்சாரப் படங்களில் மகன தேஜஸ்வீ பிரசாத் யாதவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
’சமோசாவில் ஆலு(உருளைக்கிழங்கு) உள்ளவரை பிஹாரில் லாலு இருப்பான்!’. தனது அரசியல் நடவடிக்கை பற்றி லாலு அடிக்கடி கூறும் வாசகம் இது.
ஆனால், பிஹாரின் சமோசாக்களில் ஆலு தொடர்ந்திருக்க, லாலு மட்டும் கால்நடைத் தீவன வழக்கினால் ஜார்கண்டின் சிறையில் வாடுகிறார். இதனால், லாலுவிற்கு பின் ஆர்ஜேடியில் இளைய மகனான தேஜஸ்வீயே அதிகம் முன்னிறுத்தப்படுகிறார்.
பீஹாரில் நடைபெறவிருக்கும் மூன்று கட்ட சட்டப்பேரவை தேர்தலில் ஆர்ஜேடியின் பிரச்சாரப் படங்களில் லாலுவின் படங்கள் அதிகம் இல்லை. இவருக்கு பதிலாக தேஜஸ்வீயின் படங்கள் பெரிய அளவில் நிறுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் ஆர்ஜேடி நிர்வாகிகள் கூறும்போது, ‘கடந்த 1990 முதல் 2005 வரை லாலுவின் 15 வருட ஆட்சியில் பிஹாரில் ஊழல் மலிந்திருந்தது.
இதனால், அவரது படங்களை பார்க்கும் போது பலருக்கும் லாலு ஆட்சி மீதான அச்சம் இன்னும் மாறாமல் உள்ளது. இதை புரிந்துகொண்ட தேஜஸ்வீ தனது தந்தைக்கு பதிலாக தன்னையே முன்னிறுத்துகிறார்.’ எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில், பிஹாரில் தொடந்து 2005 முதல் 15 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமாருக்கு எதிர்ப்புகளும் நிலவுகிறது. இத்துடன், பாஜக தலைமையிலான மத்திய அரசின் எதிர்பாளர்களுக்கும் லாலு கட்சிக்கு வாக்களிப்பதை தவிர வேறு வழியில்லை.
நிதிஷ் கட்சியினரும் லாலுவை விடுத்து அவரது மகன் தேஜஸ்வீயை அதிகமாக விமர்சிக்கின்றனர். இது பிஹாரில் இளம் சமுதாயத்தினர் பார்வையை தேஜஸ்வீ பக்கமாகவும் திருப்பியுள்ளது.
எனவே, ஆர்ஜேடியின் பிரச்சாரப் படங்களில் லாலு அகற்றப்பட்டு மகன் தேஜஸ்வீ முக்கியத்துவம் பெற்றுள்ளார். மூன்று முறை முதல்வராக இருந்த தேஜஸ்வீயின் தாயான ராப்ரி தேவியையும் பிரச்சாரப் படங்களில் காண முடிவதில்லை.
இதேநிலை, லாலுவின் மூத்த மகளும் மாநிலங்களவை எம்.பியுமான மிசா பாரதி மற்றும் இளைய மகனும் முன்னாள் பிஹார் மாநில அமைச்சருமான தேஜ் பிரசாத் யாதவின் படங்களும் காணப்படவில்லை.
எனினும், தேஜஸ்வீயை மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் மட்டுமே ஏற்றுள்ளன. முக்கியக் கூட்டணிகளான ஆளும் தேஜமுவும், எதிர்க்கும் மெகா கூட்டணியிலும் தொகுதி உடன்பாடுகள் முடியாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.