விவசாயிகளின் பெயரில் காங்கிரஸ் வன்முறையை தூண்டி வருவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகிய வேளாண் தொடர்பான 3 மசோதாக்களை மத்திய அரசு மழைக்காலக் கூட்டத்தொடரில் கொண்டு வந்தது.
இந்த மசோதாவுக்கு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. மக்களவையில் மத்திய அரசுக்குப் பெரும்பான்மை இருப்பதால், எளிதாக நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து விவாதத்தில் பங்கேற்றன. எனினும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே மசோதாக்கள் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டன.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ரயில் மறியல் போராட்டம், பாரத் பந்த் நடத்தினர். எனினும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 வேளாண் மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்தநிலையில் நாட்டின் பல பகுதிகளில் இன்று விவசாயிகள் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுடெல்லி இந்தியா கேட் பகுதியில் நடந்த போராட்டத்தில் டிராக்டர் ஒன்று எரிக்கப்பட்டது தொடர்பாக 5 பேரைப் போலீஸார் கைது செய்தனர். பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் டிராக்டர் கொளுத்தப்பட்டதை நேரலையாக ஒளிபரப்பினர்.
இதற்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
‘‘தலைநகர் டெல்லியில் நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. விவசாயிகளின் பெயரில் காங்கிரஸ் தனது உண்மையான நிறத்தை காட்டி விட்டது. விவசாயிகளை தவறாக வழிநடத்தும் காங்கிரஸின் நடவடிக்கை கண்டத்துக்குரியது.
இதுமட்டுமின்றி சில சமூக விரோத சக்திகளும் விவசாயிகள் என்ற பெயரில் வன்முறையை தூண்டி வருகின்றன.’’ எனக் கூறினார்.