திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் பெய்யும் மழை நீர், திருப்பதியில் உள்ள பிரசித்தி பெற்ற கபிலேஸ்வரர் கோயில் அருகே நீர்வீழ்ச்சியாக கொட்டுகிறது.
கபில தீர்த்தம் என அழைக்கப்படும் இதில் ஏராளமான பக்தர்கள் தினமும் புனித நீராடுவது வழக்கம். இந்த நீர்வீழ்ச்சிக்கு மேல் புறம் உள்ள குட்டையில் இருந்து தண்ணீர் கீழே கொட்டுகிறது. இந்த குட்டையில் அடிக்கடி திருப்பதியைச் சேர்ந்த இளைஞர்கள் நீச்சல் பழகுவது வழக்கம்.
நேற்று முன்தினம் மாலை திருப்பதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கபில தீர்த்தத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது பலத்த மழை பெய்ததால் நீர் வரத்து அதிகரித்தது. இதனால் 7 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மீட்புக் குழுவினர், இரவு 11 மணி அளவில் உடல்களை மீட்டு, திருப்பதி ருயா அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தை நேரில் கண்ட பாபு ஜான் தெரிவித்த தகவலின்படி, நேற்று அதிகாலை முதல் மீண்டும் வனத்துறையினர், தீயணைப்பு படையினர் குட்டை மற்றும் கோயில் குளத்தில் சடலங்களை தேடினர். அப்போது மேலும் ஒருவரின் சடலம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.
திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ், சித்தூர் மாவட்ட ஆட்சியர் சித்தார்த் ஜெயின், தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ணமூர்த்தி, திருப்பதி எஸ்.பி. கோபிநாத் ஜெட்டி மற்றும் வனத்துறை, தேவஸ்தான, போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.