திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிக மாசம் பிரம்மோற்சவ விழா 9-வது நாளான இன்று தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.
இந்துக்களின் சந்திர நாள்காட்டியின் படி 13 மாதங்கள் வரும் ஆண்டில் திருமலை திருப்பதியில் இரு பிரம்மோற்சவ விழா கொண்டாடப்படும். அதன்படி, கடந்த 19-ம் தேதி திருப்பதி திருமலையில் அதிக மாசம் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த 9 நாட்களில் உற்சவர் வெங்கடேஸ்வரர், தாயார் பத்மாவதி, லட்சுமி ஆகியோர் பல்வேறு வாகனங்களில் வந்து காட்சி அளித்தனர்.
இந்நிலையில் அதிக மாசம் பிரம்மோற்சவ விழாவின் கடைசி நாளான இன்று (27-ம் தேதி) உற்சவர் வெங்கடேஸ்வரர், பத்மாவதி தாயார், ஸ்ரீ லட்சுமி, ஸ்ரீ சக்கரம் ஆகியோருக்கு வேத மந்திரங்கள் முழங்க தீர்த்தவாரி நடந்தது. வேத விற்பன்னர்கள், தலைமை அர்ச்சகர்கள் சிறப்பு ஆராதனைகளையும், பூஜைகளையும் நடத்தினர். அதன்பின் மீண்டும் மலைக்கு உற்சவர் கொண்டு செல்லப்பட்டார்.
கடந்த பல நூற்றாண்டுகளாக, கோயில் குளத்தில் சக்ர ஸ்நானம் உற்சவர், பத்மாவதி தாயார், ஸ் ரீலட்சுமி, ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஆகியோருக்கு நடக்கும். லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சக்ர ஸ்நானம் செய்வார்கள்.
ஆனால், இந்த முறை கரோனா வைரஸ் பரவல் காரணமாக பக்தர்கள் யாரையும் தேவஸ்தான நிர்வாகம் அனுமதிக்கவில்லை. சக்ர ஸ்நானமும் நடத்தப்படவில்லை.
கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இம்முறை வீதி உலா இன்றி, பக்தர்கள் இன்றி, கோயிலுக்குள் மட்டுமே வாகன சேவை நடத்தப்பட்டது. வரும் அக்டோபர் 16-ம் தேதி முதல் நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. இந்த பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்க பக்தர்கள் ஆர்வமாக இருக்கும் நிலையில், பக்தர்களை அனுமதிப்பது குறித்து தேவஸ்தான நிர்வாகம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.