ராமர் கோயில் கட்டுவதற்கு பூமி பூஜை நடத்தி முடிக்கப்பட்டபின், அயோத்தியில் நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. ரியல் எஸ்டேட் வியாபாரமும் சூடு பிடித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் வழக்கில் தீர்ப்பு வழங்காதவரை நிலத்தின் மதிப்பு மிகக்குறைவாக இருந்தது. சொத்துகள் வாங்குவதிலும் மக்கள் தயக்கம் காட்டினர். ஆனால், கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் ராம ஜென்மபூமி வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு நிலம் வாங்கப் பலரும் போட்டி போடுகின்றனர். இதனால் கடந்த 6 மாதங்களில் நிலத்தின் மதிப்பு எகிறத் தொடங்கியுள்ளது.
அதிலும் ராமர் கோயிலுக்கு பூமி பூஜை போடப்பட்டபின் நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகரி்த்துள்ளது. ஏனென்றால், அயோத்தியில் விரைவில் மிகப்பெரிய ரயில் நிலையம், சர்வதேச விமான நிலையம் போன்ற சர்வதேச தரத்திலான வசதிகள் வர இருப்பதால் இப்போதே ஏராளமானோர் நிலத்தை வாங்கி வருகின்றனர். இந்தத் தகவலை அறிந்தபின் நிலத்தின் உரிமையாளர்களும் விலையைக் கண்டபடி உயர்த்திவிட்டனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பின் அயோத்தியில் நிலத்தின் மதிப்பு 30 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்தது. ஆனால், பூமி பூஜைக்குப் பின் இரு மடங்கு முதல் 3 மடங்கு நிலத்தின் விலை உயர்ந்துள்ளது. ஏறக்குறைய கடந்த ஓராண்டுக்குள் அயோத்தியில் உள்ள நிலத்தின் மதிப்பு 3 மடங்கு வரை உயர்ந்துள்ளது.
அயோத்தியின் புறநகர் பகுதியில் ஒரு சதுர அடி ரூ.400 முதல் 500 வரை கடந்த ஆண்டு விற்கப்பட்டது. தற்போது ரூ.1000, முதல் ரூ.1500 வரை விலை போகிறது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முன் அயோத்தியின் பிரதான நகரில் ஒரு சதுர அடி நிலம் ரூ.1000 என்ற நிலையில் விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.2 ஆயிரம் முதல் ரூ. 3 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.
அயோத்தியில் உள்ள அவாத் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வினோத் குமார் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “அயோத்தியில் ரியல் எஸ்டேட் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. சாதாரண மக்கள் முதல் பெரிய தொழிலதிபர்கள் வரை அயோத்தியில் நிலம் வாங்க ஆர்வமாக இருக்கிறார்கள்.
அதிலும் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் இங்கு ரியல் எஸ்டேட் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இங்கு செய்ய இருப்பதால், நிலத்தின் மதிப்பு வருங்காலத்தில் அதிகரிக்கும் என்று எண்ணி இப்போதே நிலத்தைக் கிடைத்த விலைக்கு வாங்கி வருகின்றனர்.
நிலம் கையகப்படுத்துதலைப் பொறுத்தவரை, மாவட்டத்தில் எந்தெந்த இடங்களில் நிலம் வாங்கக்கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அயோத்தியில் ஏராளமான சொத்துகளில் வில்லங்கம் நிலவுகிறது. ஆனால், ரியல் எஸ்டேட் விற்பனையாளர்கள் பலர் நிலம் விற்பனைக்கு எனப் பதாகைகள் வைத்துள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.