வேளாண் மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம் வெற்றி அடைந்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அகாலிதளம் விலகி, விவசாயிகளின் வீட்டுக் கதவு முன் தலைவணங்கியுள்ளது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய அமைச்சர் பதவியிலிருந்து அகாலி தளம் கட்சியின் எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் கடந்த இரு வாரங்களுக்கு முன் விலகினார்.
ஆனால், இந்த மசோதாக்களுக்குத் தொடர்ந்து விவசாயிகள் தரப்பில் போராட்டங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன. எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தன. ஆனால், அனைத்தையும் பொருட்படுத்தாமல், நாடாமன்றத்தில் இந்த 3 மசோதாக்களையும் மத்திய அரசு நிறைவேற்றியது.
இதையடுத்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக சிரோன் மணி அகாலிதளம் கட்சி நேற்று அறிவித்தது.
பாஜக கூட்டணியில் கடந்த 1997-ம் ஆண்டுமுதல் இருந்து வரும் அகாலி தளம் வேளாண் பிரச்சினையில் விலகியுள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்ரில் பதிவிட்ட கருத்தில், “வேளாண் மசோதாக்களுக்கு எதிராக விவாசயிகள் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.
கறுப்புச் சட்டங்களின் ஆதரவாளரான, அகாலி தளம், மோடி அரசிலிருந்தும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகிவிட்டது. இப்போது விவசாயிகளின் வீட்டுக் கதவு முன் தலைவணங்கி அகாலி தளம் நிற்கிறது” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், பஞ்சாப் மாநில முதல்வருமான அமரிந்தர் சிங் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “பாஜவின் உண்மையான முகம் மக்களுக்கு வெளிப்பட்டவுடன் சிரோன்மணி அகாலி தளம் கட்சிக்கு வேறு வாய்ப்பில்லை.
விவசாயிகளுக்கு எதிரான மசோதாக்கள் நிறைவேற அகாலிதளமும், பாதலின் கட்சி அலுவலகமும் இதற்குப் பொறுப்பு. அரசியல் கட்டாயத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்பது தெளிவாகத் தெரிகிறது. நியாயப்படுத்த முடியாத வகையில் விவசாயிகளைத் தவறாக வழிநடத்திய கடந்த 3 மாத வஞ்சகத்தின் வெளிப்பாட்டின் முடிவால் இந்தக் கூட்டணி முறிவு நடந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.