அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவர் ஹர்சிம்ரத் கவுர் : கோப்புப்படம் 
இந்தியா

‘வாஜ்பாய் உருவாக்கிய என்டிஏ கூட்டணி இதுவல்ல; பஞ்சாப் பற்றிய பார்வையில்லாமல் போய்விட்டது’ - ஹர்சிம்ரத் கவுர் விமர்சனம்

பிடிஐ

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் உருவாக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி இப்போது இருக்கும் கூட்டணி அல்ல. பஞ்சாப் மாநிலம் குறித்த பார்வையே மத்திய அரசுக்கு இல்லாமல் போய்விட்டது என்று அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவர் ஹர்சிம்ரத் கவுர் விமர்சித்துள்ளார்.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய அமைச்சர் பதவியிலிருந்து அகாலி தளம் கட்சியின் எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் கடந்த இரு வாரங்களுக்கு முன் விலகினார்.

ஆனால், இந்த மசோதாக்களுக்குத் தொடர்ந்து விவசாயிகள் தரப்பில் போராட்டங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன. எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தன. ஆனால், அனைத்தையும் பொருட்படுத்தாமல், நாடாளுமன்றத்தில் இந்த 3 மசோதாக்களையும் மத்திய அரசு நிறைவேற்றியது.

இதையடுத்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக சிரோன் மணி அகாலி தளம் கட்சி நேற்று அறிவித்தது.

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவருமான ஹர்சிம்ரத் கவுர் ட்விட்டரில் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

அதில், “மத்திய அரசின் பிடிவாதமான நிலைப்பாட்டை 3 கோடி பஞ்சாப் மக்களின் வலியும், போராட்டமும் தளர்த்துவதில் தோல்வி அடைந்துவிட்டாலே, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாதல் சாஹேப் சேர்ந்து உருவாக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியாக நீண்டகாலத்துக்கு இருக்க முடியாது.

இப்போது இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு செவித்திறன் இல்லை, தேசத்துக்கு நீண்டகாலமாக உணவு அளித்துவரும் பஞ்சாப் மக்களின் நலனைப் பார்ப்பதில் பார்வை இழந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவர் மதன் மோகன் மிட்டல் கூறுகையில், “சிரோன்மணி அகாலி தளம் கட்சி, பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக எடுத்துள்ள முடிவு வெறுப்பின்பால் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் மாநில பாஜக ஞாயிற்றுக்கிழமை கூடி இந்த விவகாரத்தை விவாதிக்கும்” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT