குப்தேஷ்வர் பாண்டே 
இந்தியா

அரசியலில் களமிறங்குவதற்காக விருப்ப ஓய்வு பெற்ற பிஹார் டிஜிபி: ஐக்கிய ஜனதா தளம் சார்பில் தேர்தலில் போட்டியிட திட்டம்

ஆர்.ஷபிமுன்னா

பிஹாரின் காவல் துறை தலைமைஇயக்குநரான குப்தேஷ்வர் பாண்டே அரசியலில் களமிறங்குவதற்காக கடந்த வாரம் விருப்ப ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவர், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டவர் பிஹார் மாநில டிஜிபியாக இருந்த குப்தேஷ்வர் பாண்டே. இதில் முதல்வர் நிதிஷ் குமாருக்கு சாதகமான கருத்தை தெரிவித்தார், மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனாவை தாக்கி இருந்தார். இந்த சூழலில் கடந்தவாரம் திடீரென அவர் தனதுஐபிஎஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்தார். 1987-ம் ஆண்டில் ஐபிஎஸ் ஆகதேர்வான குப்தேஷ்வரின் பணிக்காலம் 2021-ம் ஆண்டு பிப்ரவரி வரை இருந்தது. குறைந்தது 3 மாதம் கால அவகாசம் இல்லாமல் அளித்த டிஜிபி குப்தேஷ்வரின் விண்ணப்பம் மத்திய உள்துறை அமைச்சகத்தால் ஏற்கப்பட்டது. இதனால், அவர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இது உண்மையாகும் விதத்தில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரை நேற்று அவர் சந்தித்து பேசியுள்ளார்.

நிதிஷ் உடன் சந்திப்பு

இதுகுறித்து குப்தேஷ்வர் பாண்டே கூறும்போது, "எனது பணிக்காலத்தில் எந்த தலையீடும் செய்யாமல் நிதிஷ் குமார் ஒத்துழைப்பு அளித்திருந்தார். அதற்காக அவருக்கு நன்றி கூறுவதற்காக அவரை நேரில் சந்தித்தேன்" என்றார். எனினும், பிஹார் சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் அதில் போட்டியிடவே இந்த சந்திப்பு எனக் கருதப்படுகிறது. தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐபிஎஸ் பணியில் இருந்து குப்தேஷ்வர் விருப்ப ஓய்வு பெறுவது முதன்முறை அல்ல. இதற்கு முன் அவர் 2009 மக்களவை தேர்தலுக்கு முன்பாகவும் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்தார். அப்போது பிஹாரின் பக்ஸர் தொகுதியில் போட்டியிட விரும்பியவருக்கு சில தவிர்க்க முடியாதகாரணங்களால் வாய்ப்பு கிடைக்காமல் போனது.

அதன் பின்னர் 9 மாதங்களாக ஏற்கப்படாமல் இருந்த குப்தேஷ்வரின் விருப்ப ஓய்வு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு மீண்டும் பணியில் சேர்ந்தார். இதன் பிறகு 10 வருடங்களுக்கு பின் முதல்வர் நிதிஷ் குமார் அரசால் டிஜிபி பதவி பெற்றவர், மீண்டும் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இதுபோல, தேர்தலில் போட்டியிடும் காவல் துறை அதிகாரிகள் பட்டியலில் ஓய்வுபெற்ற மேலும் 2 டிஜிபிக்களான கே.எஸ்.துவேதி, சுனில் குமார் ஆகியோரும்இணைவார்கள் என தெரிகிறது.

SCROLL FOR NEXT