மும்பை: மும்பையில் உள்ள மாலட் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சோதனை நடத்திய போலீஸார், பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 3 பெண்களை பிடித்தனர். இதனைத் தொடர்ந்து, மும்பை பெருநகர நீதிமன்ற உத்தரவின்படி, அந்த 3 பெண்களையும் சீர்திருத்த இல்லத்துக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். இந்த உத்தரவை எதிர்த்து அந்தப் பெண்கள் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது, நீதிபதி பிரித்வி சவாண் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
இந்த வழக்கில் மனுதாரர்கள் 3 பேரும் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆவர். அவர்களுக்கு தங்களின் தொழிலை தேர்ந்தெடுக்கும் முழு சுதந்திரமும் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பாலியல் தொழில் என்பது சட்டப்படி குற்றமோ அல்லது தண்டனைக்குரிய செயலோ கிடையாது.
மேலும், இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில், அந்தப் பெண்கள் விபச்சார நோக்கத்துக்காக மற்றவர்களை வற்புறுத்தினார்கள் என்பது எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. அப்படியிருக்கும்போது, அந்தப் பெண்களை சீர்திருத்த இல்லத்தில் அடைத்து வைத்திருப்பது சட்டப்படி தவறானது. எனவே, அவர்களை உடனடியாக அங்கிருந்து விடுவிக்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.