இந்தியா

நிதிஷ் அரசின் பரிந்துரை ஏற்பு: பாஜக கூட்டணிக்கு வந்த மாஞ்சிக்கு ’இசட் ப்ளஸ்’ பாதுகாப்பு

ஆர்.ஷபிமுன்னா

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியில்(தேஜமு) இணைந்த பிஹாரின் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சிக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பிஹாரின் முதல்வர் நிதிஷ்குமார் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் தலைவரான நிதிஷ்குமாரால் பிஹார் முதல்வராக்கப்பட்டவர் ஜிதன்ராம் மாஞ்சி. 2014 மக்களவை தேர்தலால் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்ற நிதிஷ் செய்த ராஜினாமாவால் மாஞ்சிக்கு இவ்வாய்ப்பு கிடைத்தது.

சில மாதங்களுக்கு பின் தலித் சமூகத்தின் தலைவரான தன்னை பதவி இறக்கிய போது நிதிஷ் கட்சியை விட்டு வெளியேறினார் மாஞ்சி. பிறகு இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா எனும் பெயரில் ஒரு அரசியல் கட்சியை துவக்கினார் மாஞ்சி.

தொடர்ந்து பாஜகவையும், நிதிஷையும் கடுமையாக விமர்சித்தும் வந்தார். கடந்த 2019 மக்களவை தேர்தலில் அவர், லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான மெகா கூட்டணியில் சேர்ந்திருந்தார்.

இதில் அவருக்கு பலன் எதுவும் கிடைக்காதமையால் பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக தேஜமுவுடன் இணைந்துள்ளார் மாஞ்சி. இதன் பலனாக அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட இசட் ப்ளஸ் பாதுகாப்பு மத்திய அரசால் ஏற்கப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது.

தேஜமுவில் மாஞ்சியின் வரவால் மத்திய உணவுத்துறை அமைச்சரான ராம்விலாஸ் பாஸ்வான் அதிருப்தியாக இருப்பதாகக் கருதப்படுகிறது. தேஜமு உறுப்பினரான அவர் பிஹாரில் தலீத் ஆதரவுக் கட்சியான லோக் ஜனசக்தியின் தலைவர்.

இதனால், மாஞ்சியை விடக் குறைவாக இசட் பாதுகாப்பு கிடைப்பதால் பாஸ்வான் தேஜமு மீது மேலும் அதிருப்தியை காட்டுவதாகக் கருதப்படுகிறது. பிஹாரில் ஆளுநர், முதல்வர் நிதிஷ் மற்றும் துணை முதல்வர் சுசில்குமார் மோடி

ஆகியோருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது

SCROLL FOR NEXT