ஆதிர் ரஞ்சன் சவுத்ரி. 
இந்தியா

சுஷாந்த் விசாரணையை போதைப்பொருள் தடுப்புக் கழகம் எடுத்தும் இன்னுமா ‘பயங்கரவாதத் தொடர்பு’ கண்டுப்பிடிக்கப்படவில்லை, என்ன அதிசயம்!: ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடும் கிண்டல் 

ஏஎன்ஐ

வேறு எந்த விவகாரமும், மக்கள் பிரச்சினையும் இல்லை என்பது போல் சுஷாந்த் தற்கொலை விவகாரத்தை வைத்து மிகவும் அழுக்குத்தனமான அரசியல் செய்து வருகிறது பாஜக என்று காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விளாசியுள்ளார்.

பிஹார் தேர்தலில் சுஷாந்த் மரணம் குறித்த விசாரணையை போதைப்பொருள் தடுப்பு கழகத்திடம் விட்டு விட்டதன் மூலம் தேர்தல் லாபம் அடைய பாஜக முயன்று வருகிறது, இது ஒரு அழுக்கு அரசியல் என்று சாடியுள்ளார்.

“சிபிஐ, அமலாக்கப்பிரிவு இப்போது காணோம். இப்போது போதைப்பொருள் தடுப்புக் கழகம் விசாரணையைக் கையில் எடுத்துள்ளது. என்சிபி நீங்கள் என்ன விசாரிக்கிறீர்கள்? போதைப்பொருள்? இதுவரை எத்தனை கிலோ போதைப்பொருளைக் கைப்பற்றினீர்கள்? இன்னுமா பயங்கரவாதத் தொடர்பு கண்டுப்பிடிக்கப்படவில்லை? போலிகள்! குறைந்தது யுஏபிஏ சட்டம் அல்லது தேசியப் பாதுகாப்புச் சட்டம் இந்நேரம் பாய்ந்திருக்க வேண்டமா? என்ன விசாரணை, போலி விசாரணை!!

சுஷாந்த் சிங் விவகாரம் பாஜக-வுக்கு விரும்பத்தகுந்த அரசியல் மைலேஜ் தரவில்லை. எனவே போதைப்பொருள் என்று தற்போது விசாரணை நடக்கிறதாம். சிபிஐ, அமலாக்கப்பிரிவு போய் இப்போது என்சிபி.

பிஹாரில் தேர்தல் வேறு அறிவித்தாகிவிட்டது, அதற்குள் வாக்குவங்கியை பிடிக்க ஏதாவது பரபரப்பு கிடைக்குமா என்று பாஜக அலைகிறது. அது போதைப்பொருள் அல்ல, பாவம், இரங்கத்தக்க அரசியல்தான் இது.

பிஹார் தேர்தலுக்கு புதிதாகப் பரபரப்பு பாஜகவுக்குத் தேவைப்படுகிறது. பாஜகவின் கொள்கைக் காலவாதியானதற்கு இதுவே அடையாளம். சுஷாந்த் சிங் ராஜ்புத்தை கொன்றது யார்? இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்? யார் குற்றவாளி? இது முட்டாள்தனமான அரசியல். ” என்று விளாசித்தள்ளினார்.

SCROLL FOR NEXT