இந்தியா

25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த இல.ஆதிமூலம் ஐஎன்எஸ் தலைவராகிறார்: பெங்களூருவில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு

இரா.வினோத்

இந்திய பத்திரிகை சங்கத்தின் (ஐஎன்எஸ்) தலைவராக ‘தினமலர்'கோயம்புத்தூர் பதிப்பின் வெளியீட்டாளர் இல. ஆதிமூலம் நேற்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய பத்திரிகை சங்கம் (ஐ.என்.எஸ்.) இந்திய அளவில்800 பத்திரிகைகளை உறுப்பினர்களாகக் கொண்டு கடந்த 80 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதன் 81-வது ஆண்டுபொதுக்குழு கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.

இதில் 2019-20-ம் ஆண்டின் தலைவராக இருந்த சைலேஷ் குப்தாவின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. அவர் தன் நிறைவுரையில், ‘‘கரோனா தொற்று காலத்தில் அச்சு இதழியல் துறை பல்வேறு வழிகளில் கடும் நெருக்கடியை சந்தித்திருக்கிறது. இந்த நேரத்தில் மத்திய அரசு பத்திரிகை நிறுவனங்கள் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்று, உடனடியாக உதவ வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து இந்திய பத்திரிகை சங்கத்தின் 2020-21ம் ஆண்டுக்கான தலைவராக ‘தினமலர்’ நாளிதழின் கோயம்புத்தூர் பதிப்பின் வெளியீட்டாளரும், அந்நிறுவனத்தின் வர்த்தகம்மற்றும் தொழில் நுட்ப பிரிவின்இயக்குநருமான இல. ஆதிமூலம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இவருடன் சங்கத்தின் துணைத் தலைவராக டி.டி.புர்கயாஸ்தா (அம்ரித் பஜார் பத்திரிகா), உதவி தலைவராக மோஹித் ஜெயின் (எகானாமிக் டைம்ஸ்), பொதுச் செயலாளராக மேரி பால், பொருளாளராக ராகேஷ் ஷர்மா (ஆஜ் சமாஜ்) தேர்வு செய்யப்பட்டனர். இதுதவிர ‘தினமலர்' இணை நிர்வாக ஆசிரியர் ஆர்.லட்சுமிபதி, ‘தினத் தந்தி' நிர்வாக இயக்குநர் எஸ். பாலசுப்ரமணிய ஆதித்தன், ‘தினகரன்' நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ் உட்பட 34 பேர் நிர்வாகக்குழு உறுப்பினர் களாக தேர்வு செய்யப்பட்டனர்.

ஐஎன்எஸ் அமைப்பின் தலைவர் பொறுப்பை தமிழகத்தை சேர்ந்த ‘தி இந்து’ குழும நிர்வாகி கஸ்தூரி சீனிவாசன் (1947 - 48), தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தலைவர் ராம்நாத் கோயங்கா (1951 - 52), சுதேச மித்ரன் நிர்வாகி சி.ஆர்.சீனிவாசன் (1953 - 54), ‘தி இந்து’ குழும நிர்வாகி ஜி.நரசிம்மன் (1956 - 57), ‘தி இந்து’ குழும பதிப்பாளர் என்.முரளி (1983 - 84), தினமலர் நிர்வாக ஆசிரியர் ஆர். லட்சுமிபதி (1992 -93),‘தினத்தந்தி' அதிபர் சிவந்தி ஆதித்தன் (1995-96) ஆகியோர் வகித்துள்ளனர். 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தை சேர்ந்தஇல. ஆதிமூலத்துக்கு இந்தப்பொறுப்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT