ராகுல் காந்தி உள்ளிட்ட பல எம்.பி.க்கள் ஏன் கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை என்பது குறித்து காங்கிரஸ் கட்சியினர் சுயபரிசோதனை செய்ய வேண்டும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நடந்து கொண்ட முறை தண்டனைக்குரிய குற்றமாகும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கண்டித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த இரு வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் கடந்த ஞாயிறன்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
இந்த மசோதா மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விதிமுறைகளை மீறி அவையின் துணைத்தலைவர் மேஜையில் இருந்த காகிதங்களை கிழித்து வீசினர். இதனால் 8 எம்.பி.க்களைக் கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்து அவைத்தலைவர் வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டார்.
சஸ்பெண்ட் உத்தரவைத் திரும்பப் பெறும் வரை அவையைப் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அறிவித்தனர். ஆனால், மன்னிப்புக் கோரினால், 8 எம்.பி.க்கள் மீதான நடவடிக்கையும் திரும்பப் பெறப் பரிசீலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
மேலும், மாநிலங்களவையில் 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக மக்களவையிலும் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் அவையைப் புறக்கணித்து வெளிநடப்புச் செய்தனர்.
இதுகுறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மழைக்காலக் கூட்டத்தொடரின் போது, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்பட பல எம்.பி.க்கள் அவைக்கு வரவில்லை. இதுகுறித்து ஏன் அந்தகட்சி சுயபரிசோதனை செய்யவில்லை. அவையில் அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் வந்து அரசுடன் பல்வேறு விஷயங்களில் வாதிடலாம்.
காந்தியின் கொள்கைகளில் மீது எந்த நம்பிக்கையும் இல்லாதவர்கள், போலி நேரு காந்தி குடும்பத்தாரின் காந்தியின் சிலையின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபடுகிறார்கள்.
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் நடந்து கொண்ட செயல், சுதந்திர இந்திய வரலாற்றில் கறுப்புநாள், எதிர்க்கட்சிகள் மீது விழுந்த கறையாகும்.
மாநிலங்களவைச் செயலாளரின் மேஜை மீது நின்று கொண்டு விதிமுறை புத்தகத்தை கிழித்து, அவையின் துணைத்தலைவர் ஒலிபெருக்கியை பிடுங்க முயற்சித்து, பாதுகாவலர்களைத் தாக்கியுள்ளார்கள். இந்த செயல்கள் அனைத்தும் எம்.பி.க்களுக்கு தண்டனைக்குரியதே.
பிரதமர் மோடியின் புகழ், வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல், தங்கள் இயல்புநிலையை மறந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைவரும் வெறுப்புடன் செயல்படுகிறார்கள்.
வேளாண் மசோதா தாக்கல் செய்யும் போது மாநிலங்களவையில் ஏராளமான எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வரவில்லை. 182 உறுப்பினர்கள் உள்ளஅவையில் மசோதா நிறைவேறும் போது 110 எம்.பி.க்கள் மட்டுமே இருந்தனர். அவர்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள்.
மக்களின் ஆசிர்வாதத்தால், பிரதமர் மோடியின் கீழ் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மாநிலங்களவையில் 2024-ம் ஆண்டில் அனைத்து மசோதாக்களையும் நிறைவேற்றுவோம்.
எதிர்்கட்சிகள் எங்களை ஏதேச்சதிகாரம் செய்ய முடியாது. ஆரோக்கியமான ஜனநாயகத்தில் அவர்கள் விவாதங்களில் ஈடுபடலாம், நாடாளுமன்றம் சமூகமாகச் செயல்பட ஒத்துழைக்கலாம்
இவ்வாறு ஜோஷி தெரிவித்தார்.