இ-சஞ்சீவனி தொடங்கப்பட்ட 6 மாதத்தில் 3 லட்சம் தொலைதூர மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
மத்திய சுகாதாரத்துறையின் வெளிநோயாளிகள் பிரிவான இ-சஞ்சீவனி தளம் 3 லட்சம் தொலை தூர மருத்துவ ஆலோசனைகளை நிறைவு செய்துள்ளது. இத்திட்டம் தொடங்கிய 6 மாதத்துக்குள் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 தொற்றுக்கு மத்தியில், இ-சஞ்சீவனி சேவைகள், நோயாளிகள் - மருத்துவர்கள் இடையேயான தொலைதூர மருத்துவ ஆலோசனைகளை சாத்தியமாக்கியது. கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தவும், கொவிட் அல்லாத நோய்களுக்களுக்கான மருத்துவ ஆலோசனைகளை பெறவும் இது உதவியது.
தொலைதூர ஆலோசனைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதே, இத்திட்டம் மக்களிடையே பிரபலம் அடைந்ததற்கு சாட்சியம்.
இ-சஞ்சீவனி திட்டத்தை நாட்டிலேயே அதிகம் பயன்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. தமிழகத்தில் இருந்து இதுவரை 1,29,801 மருத்துவ ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் 9ம் வரை 32,035 ஆலோசனைகளும், 19ம் தேதி வரை 56,346 ஆலோசனைகளும், செப்டம்பர் 8ம் தேதி வரை 97,204 ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு இ-சஞ்சீவனி தளம் அத்தியாவசி மருத்துவ சேவைகளை வழங்கியுள்ளது.
தமிழகத்துக்கு அடுத்தபடியாக உத்தரப் பிரதேசம் மாநிலத்திலிருந்து 96,151 ஆலோசனைகளும், கேரளாவில் இருந்து 32,921 ஆலோசனைகளும், உத்தரகாண்டில் இருந்து 10,391 ஆலோசனைகளும் பெறப்பட்டுள்ளன. இந்த 4 மாநிலங்கள் மொத்தம் 2,69,264 மருத்துவ ஆலோசனைகளை பெற்றப்பட்டுள்ளன. இது மொத்த ஆலோசனையில் 89.75% ஆகும்.