கரோனா பாதிப்பினால் கல்வித்துறைக்கும் மாணவர்களுக்கும் ஏற்பட்டுள்ள சுமையக்குறைக்கிறோம் என்ற பெயரில் 12ம் வகுப்பு பாடத்திட்டத்திலிருந்து ஆளும் கட்சிக்கு ‘விரும்பத்தகாத’ சில பாடங்களை அஸாம் அரசு நீக்கியுள்ளது.
அஸாம் உயர்நிலைக் கல்விக்குழு 30% பாடத்திட்டங்களை நீக்கி மாணவர்களின் சுமையைக் குறைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. சயன்ஸ், ஆர்ட்ஸ், காமர்ஸ் பாடங்களில் சில பகுதிகள் நீக்கப்பட்டன.
அரசியல் விஞ்ஞான பாடத்தில் இந்தியாவின் முதல் பிரதமரும் வளர்ச்சிக்குப் பாடுபட்டவருமான ஜவஹர்லால் நேருவிம் தேசக்கட்டுமானம் பற்றிய அணுகுமுறை குறித்த பாடம், அயலுறவு கொள்கை பாடம், நேருவுக்குப் பிறகான ஆட்சி பற்றிய பாடங்கள், கரீபி ஹதாவோ என்ற அரசியல், முதல் 3 பொதுத்தேர்தல் குறித்த பாடங்கள் நீக்கப்பட்டன.
அதே போல் இட ஒதுக்கீடு தொடர்பான மண்டல் கமிஷன் குறித்த பாடம், பஞ்சாப் நெருக்கடி, 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம், யுபிஏ குறித்த பாடங்கள், அயோத்தி தகராறு, குஜராத் கலவரம், வறட்சி மற்றும் 5 ஆண்டுத்திட்டங்களை ரத்து செய்த பாடங்கள் அபேஸ்.
இந்தியாவும் பனிப்போரும், அமெரிக்காவுக்குச் சவால் அளித்த பிற கம்யூனிஸ்ட் நாடுகள் பற்றிய பாடங்கள், மாவோவுக்குப் பிறகு சீனாவின் வளர்ச்சிப் பற்றிய பாடம், ஆயுதங்களைக் களையும் அரசியல் குறித்த பாடம், உலகமயமாதல், உலகமயமாதலுக்கு எதிர்ப்போக்குகள் இயக்கம் பற்றிய பாடங்களும் காலி.
1986 தேசியக் கல்விக்கொள்கையின் முக்கிய அம்சங்கள், பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல் குறித்த பாடங்கள், ஆகியவை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டன.
சமூகவியல் பாடப்பிரிவில், பெண்களுக்கு சம உரிமை, சிறுபான்மையினர் உரிமைகள், தேசக்கட்டுமானம், பஞ்சாய்த்து ராஜ், சமூக மாற்றத்துக்கான சக்திகள், உலகமயமாதல், நிலசீர்த்திருத்தம், பழங்குடி இயகங்கள் பற்றிய பாடங்கள் ஒழிக்கப்பட்டுவிட்டன.
மேற்கத்தியமயமாக்கம், மதச்சார்பின்மை, குடும்பம், உறவு, சாதி, காலனியாதிக்கம், மற்றும் வகுப்புகள் குறித்த பாடங்கள் சுமையைக் குறைக்கிறோம் என்ற பெயரில் ஒழிக்கப்பட்டுள்ளன.
வரலாறு படிப்பவர்கள், முகலாய அரசு முகலாய அவையில் ஜெசூட்கள், ஜமீந்தார்கள், விவசாயிகள் மற்றும் அரசு, வித்தியாசமும் போராட்டமும், வட இந்தியாவில் மதம், மதமரபுகளின் வரலாறுகளை மறுக்கட்டமைத்தல் ஆகிய பாடங்கள் தூக்கி எறியப்பட்டன.
அதே போல் தாராளமயமாக்கம், தனியாமயம், உலகமயமாதலும் இந்திய தொழிற்துறை வளர்ச்சியும், பணியிலிருக்கும் மக்கள் தொகை, ஆரோக்கிய வாழ்வு, சமூக அதிகாரம், மக்கள் தொகை, சுற்றுச்சூழல் ஆகிய பாடங்கள் சாக்குமூட்டைக்குள் சென்றன.
அதே போல் அரசு வருவாயில் குறைபாடு, அன்னியச் செலாவணி, அன்னியச்செலாவணி நிர்ணயம் செய்யும் முறை, வங்கிகளை தேசியமயமாக்கல், ஆகியவை வெளியே வீசப்பட்டன.
உயிரியல் கீழ் வரும் தாவரவியல், பயோ டெக்னாலஜி, அறவியல், சுற்றுச்சூழல் திசு, திடப்பொருள் கழிவு மேலாண்மை, அக்ரோ கெமிக்கல்ஸ், கதிரியக்கக் கழிவுகள், பசுமை இல்ல வாயு விளைவு, குளோபல் வார்மிங், ஓசோன் ஓட்டை, வனங்களை அழித்தல், ஆகியவையும் குதிருக்குள் அனுப்பப்பட்டன.