இந்தியா

கர்நாடகாவில் துரந்தோ ரயில் தடம் புரண்டு விபத்து: 2 பேர் பலி; காயம் 7

பிடிஐ

ஆந்திர மாநிலம் செகந்தராபாத்தில் இருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் கர்நாடகாவில் இன்று அதிகாலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 2 பயணிகள் பலியாகினர்.

விபத்து குறித்து ரயில்வே செய்தித் தொடர்பாளர் அனில் சக்சேனா கூறும்போது, "செகந்தராபாத்தில் இருந்து புறப்பட்ட துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 2.15 மணியளவில் கர்நாடகா மாநிலம் காலாபுராகியை (குல்பர்கா என்று அழைக்கப்படுகிறது) கடந்தபோது எதிர்பாராதவிதமாக ரயிலின் 9 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். 7 பயணிகள் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு மீட்புக் குழுவினர் விரைந்து சென்று தடம் புரண்ட ரயில் பெட்டிகளில் சிக்கியிருந்த பொதுமக்களை மீட்டனர்" என்றார்.

ஹெல்ப்லைன் எண்கள்:

விபத்து குறித்து தகவலறிய ரயில்வே நிர்வாகம் ஹெல்ப்லைன் எண்களை அறிவித்துள்ளது. அவை:

குல்பர்கா: 0847—2255066/2255067

செகந்தராபாத்: 040—27700968

சோலாபூர்: 0217—2313331

சத்திரபதி சிவாஜி ரயில் முனையம் (மும்பை)- 022—22694040

லோக்மான்ய திலக் ரயில் முனையம் (மும்பை)- 022—25280005

கல்யாண் (மும்பை)- 0251—2311499.

விசாரணைக்கு உத்தரவு:

விபத்து குறித்து விரிவான விசாரண நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார். மத்திய வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ரயில்வே நிர்வாக சேர்மன் ஏ.கே.மிட்டல் தெரிவித்துள்ளார்.

நிதியுதவி அறிவிப்பு:

துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் பலியானாவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், பெரிய அளவில் காயமடைந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.50,000-மும், சிறு காயங்களுடன் தப்பியவர்களுக்கு ரூ.25,000-மும் நிதியுதவி வழங்கப்படும் என ரயில்வே நிர்வாக சேர்மன் ஏ.கே.மிட்டல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, "மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. விபத்துக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை. காயமடைந்தவர்கள் காலாபுராகியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

SCROLL FOR NEXT