நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சம்மன் அனுப்பலாமா, வேண்டாமா என்பது குறித்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனை வரும் வரும் 21-ம் தேதிக்குள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு முறை கேடாக நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதாக சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது. இதில் ஜார்க் கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நவீன் ஜிண்டால், தாசரி நாராயண் ராவ் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கடந்த 2-ம் தேதி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் பிரதமரும் அப்போதைய நிலக்கரித் துறை அமைச்சருமான மன்மோகன் சிங்கிற்கு எல்லாம் தெரி யும், அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் என்று மதுகோடா வலியுறுத்தினார்.
இந்நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆர்.எஸ். சீமா ஆஜராகி வாதாடினார். அவர் கூறியபோது, மன்மோகன் சிங்கிற்கு சம்மன் அனுப்புவது தொடர்பாக வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் கருத்துகளையும் அறிய வேண்டும் என்று தெரிவித்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி பாரத் பர்சாகர், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நவீன் ஜிண்டால், தாசரி நாராயணன் உள்ளிட்டோர் வரும் 21-ம் தேதிக் குள் தங்கள் பதிலை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.