பிஹாரில் வளரும் இளம் தலைவரான கன்னையா குமாரை, தேஜஸ்வி பிரசாத் தனது போட்டியாளராக கருதுவதாகத் தெரிகிறது. இதனால் வரும் தேர்தலில் லாலுவின் மெகா கூட்டணியில் இடதுசாரிக் கட்சிகள் சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பிஹார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படஉள்ளது. இதில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி, தொகுதிப் பங்கீடுபேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இக்கூட்டணியில் புதிய உறுப்பினர்களாக சேர இடதுசாரிக் கட்சிகளும் உடன்பட்டுள்ளன. இடதுசாரிக் கட்சிகளில், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிபிஐ (எம்எல்) ஆகிய முக்கிய கட்சிகளுடன் 3 சிறிய கட்சிகளும் உள்ளன. இவை அனைத்துக்கும் சேர்த்து சுமார் 15 தொகுதிகள் ஒதுக்கப்படுவதால் இடதுசாரிகள் இடையே அதிருப்தி எழுந்துள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் இடதுசாரி கட்சி நிர்வாகிகள் வட்டாரத்தில் கூறும்போது, “எங்கள் அனைவரின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னையா குமார் முக்கிய இளம் தலைவராக முன்னிறுத்தப்படுகிறார். இவரை லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் தனது போட்டியாளராக கருதுகிறார். கன்னையாவுக்கு முன் தனது திறமை அடிபட்டுவிடும் என அவர் அஞ்சுகிறார். எனவே இடதுசாரிக் கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்கி, கூட்டணியில் இருந்து கழட்டிவிடும் முயற்சி நடைபெறுகிறது” என்றனர்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவரான கன்னையா குமார் மீது தேசவிரோத சட்டத்தின் கீழ் வழக்கு நடைபெற்று வருகிறது. இவர் தற்போது ‘ஜன கன மன யாத்ரா’ என்ற பெயரில் பிஹாரில் சுற்றுப்பயணம் செய்து குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்து பிரச்சாரம் செய்து வருகிறார். கன்னையாவின் பேச்சை கேட்க பிஹார் மக்கள் அதிகம் கூடுகின்றனர். இதனால் அவரை அதிகம் முன்னிறுத்தும் இடதுசாரிகளை மெகா கூட்டணியில் சேர்க்க தேஜஸ்வி விரும்பவில்லை எனத் தெரிகிறது.
இதே காரணத்துக்காக 2019 மக்களவைத் தேர்தலில் கன்னையாவை எதிர்த்து லாலு கட்சி தனது வேட்பாளரை நிறுத்தியது. இதில் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிந்ததால் கன்னையா தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் பிஹார் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்தும் இடதுசாரிகள் யோசிக்கத் தொடங்கியுள்ளனர். பிஹாரில்கடந்த 1980 முதல் 1990 வரை2-வது பெரிய கட்சியாக இந்தியகம்யூனிஸ்ட் இருந்தது.
1990-ல் இக்கட்சியின் 23 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் லாலுஆட்சி அமைத்தார். 1995 சட்டப் பேரவை தேர்தலில் லாலு கட்சியுடன் கூட்டணி வைத்து 55 தொகுதிகளில் போட்டியிட்ட இக்கட்சி 26-ல் வெற்றிபெற்றது.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் அனைத்தும் 3.5 சதவீத வாக்குகளை பெற்றன. இதில் சிபிஐ (எம்எல்) மட்டுமே 3 எம்எல்ஏக்களை பெற்றது. இடதுசாரிக் கட்சிகள் மீண்டும் தனித்துப் போட்டியிடுவது, மெகா கூட்டணிக்கு சிக்கலை எற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.