அமெரிக்காவின் 'டைம்' இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்குமிக்க 100 தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம் பிடித்துள்ளார்.
கடந்த 1923-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட 'டைம்' இதழ், அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த இதழ் சார்பில் ஆண்டுதோறும் 'டைம் 100' என்ற பெயரில் உலகின் 100 செல்வாக்குமிக்க தலைவர்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான பட்டியலை டைம் இதழ் நேற்று வெளியிட்டது. முன்னோடிகள், கலைஞர்கள், தலைவர்கள், முக்கியமானவர்கள், பிரபலமானவர்கள் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் உலகின் 100 செல்வாக்குமிக்க தலைவர்களை டைம் இதழ் பட்டியலிட்டுள்ளது.
இதில் 'தலைவர்கள்' பிரிவில் பிரதமர் நரேந்திர மோடி இடம் பெற்றுள்ளார். ஏற்கெனவே கடந்த 2014, 2015, 2017-ம் ஆண்டுகளில் வெளியான 'டைம் 100' பட்டியலில் பிரதமர் மோடி இடம்பிடித்தார். தற்போது 4-வது முறையாக டைம் இதழ் அவரை கவுரவப்படுத்தியுள்ளது.
டெல்லி ஷாகின்பாத்தில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற 82 வயது பெண் பில்கிஸ், இந்திய வம்சாவளியை சேர்ந்த எச்ஐவி வைரஸ் ஆராய்ச்சியாளர் ரவீந்திர குப்தா, ஆல்பாபெட், கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா ஆகியோரும் 'டைம் 100' பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
அமெரிக்க ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளரும் சென்னையை பூர்வீகமாக கொண்டவருமான கமலா ஹாரிஸ், தைவான் அதிபர் சாய் இங்வென், சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல்,அமெரிக்க ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடேன், பிரேசில் அதிபர் ஜேர் போல்சோன்ரா, கருப்பின மக்கள் இயக்கத்தின் தலைவர்கள் அலிசியா, பேட்ரிஸி, ஓபல் உள்ளிட்டோரும் 'டைம் 100' பட்டியலில் உள்ளனர்.