இந்தியா

அலகாபாத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க தமிழர்கள் ஆதரவு இல்லை: உ.பி.வாசிகள் வேதனை

ஆர்.ஷபிமுன்னா

உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத் நகரில் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் என 1990-ம் ஆண்டு முதல் கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கு தமிழர்கள் ஆதரவு தரவில்லை என உ.பி.வாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அலகாபாத்தில் கங்கை, யமுனை மற்றும் மண்ணுக்குள் ஓடுவதாகக் கருதப்படும் சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகளின் சங்கமத்தில் (திரிவேணி சங்கமம்) மூழ்கி புண்ணியம் தேட தமிழர்கள் ஏராளமானோர் இங்கு வருகின்றனர். இங்கு யமுனை நதியின் தென்கரை சாலை இன்னும் பெயரிடப்படாமல் இருப்பதால் அதற்கு, ‘திருவள்ளுவர் மார்கம்’ எனப் பெயர் சூட்டி, அங்கு திருவள்ளுவர் சிலையும் வைக்க வேண்டும் என கோரிக்கை இருந்து வருகிறது.

இங்குள்ள சுமார் 6 கி.மீ நீள சாலைகளில் மரக்கன்றுகள் நட்டு அவற்றில் திருக்குறளை இந்தி மொழிபெயர்ப்புடன் எழுதி வைக்கவேண்டும் எனவும் சுமார் 25 வருடங்களாக உ.பி.வாசிகள் கோரி வருகின்றனர்.

ஆனால் இதற்கு தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் உட்பட எத்தரப்பிலும் ஆதரவு கிடைக் காமல் அந்தக் கோரிக்கை நிறை வேற்றப்படாமல் இருப்பதாக உ.பி. வாசிகள் வேதனை தெரிவிக் கின்றனர்.

இது குறித்து ‘தி இந்து’விடம் பாஷா சங்கத்தின் பொருளாளர் சந்திர மோகன் பார்கவா கூறும் போது, “தமிழை கற்றுக்கொண்ட பாஷா சங்கத்தின் மறைந்த நிறுவனரும் பொதுச்செயலாள ருமான டாக்டர் கிருஷ்ணசந்த் கவுடுவுக்கு திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் மீது அதீத ஈடுபாடு உருவானது. இதனால் அவர் அலகாபாத்தில் திருவள்ளுவருக்கு சிலை வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை 1990-ல் எழுப்பினார்.

திடீரென அவர் புற்றுநோயால் இறந்தபின், ஒவ்வொரு நிர்வாகக் குழு கூட்டத்திலும் வள்ளுவர் சிலைக்கான முயற்சி தொடர வலியுறுத்தப்படுகிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தும் இச் சங்கத்தின் பெரும்பாலான நிர்வாகிகள் உ.பி.வாசிகள்.

ஓர் ஆண்டுக்கு முன் மாநிலங் களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய், நாடாளுமன்றத்தில் திருக்குறள் பற்றி பேசினார். இதன் பிறகு அவரிடமும் எங்கள் கோரிக்கை பற்றி கூறினோம். ஆனால், அவர் அலகாபாத்தை விடுத்து தனது மாநிலமான உத்தராகண்டின் ஹரித்துவாரில் வள்ளுவர் சிலை அமைக்கும் முயற்சியில் இறங்கி விட்டார்.

தருண் விஜய் முயற்சிக்கு தமிழக எம்.பி.க்கள், அரசியல் கட்சியினர் உட்பட பலரும் அளித்த ஆதரவு வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த ஆதரவில் ஒருபகுதி எங்களுக்கு கிடைத்திருந்தால் இந்நேரம் அலகாபாத்தில் வள்ளுவருக்கு சிலை அமைந்திருக்கலாம்” என்று வேதனை தெரிவித்தார்.

அலகாபாத்தில் வள்ளுவர் சிலைக்கான கோரிக்கை முதன் முதலில் எழுந்தபோது, நகரில் அனைத்து மொழி மக்களும் வந்து செல்லும் இந்துஸ்தான் அகாடமி வளாகத்தில் வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள் என்று உ.பி. அரசு யோசனை கூறியது. இதை ஏற்க மறுத்த உ.பி.வாசிகள் தாங்கள் கேட்ட திரிவேணி சங்கமத் தில்தான் சிலை வைக்கப்பட வேண்டும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

ஒருமுறை அலகாபாத் வந்திருந்த பெருங்கவிக்கோ டாக்டர் வ.மு.சேதுராமன், சிலை வைப்பதற்காக கவுட் கொண்டிருக் கும் முயற்சியை பார்த்து வியந்து, வி.ஜி.சந்தோஷத்திடம் இதற்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார். இதை ஏற்று அவரும் ஆறரை அடி உயரத்தில் ஒன்றரை டன் எடையுள்ள திருவள் ளுவர் சிலை தயார் செய்ததாக வும், பிறகு அனுமதி கிடைக் காததால் அது வேறு இடத்தில் நிறுவப்பட்டதாகவும் கூறப்படு கிறது. பாஷா சங்கத்தில் முதல் தமிழராக அதன் பொதுச் செயலா ளராக இருக்கும் இந்திமெழி அறிஞர் டாக்டர் எம்.கோவிந்த ராஜன், கடந்த டிசம்பரில் உ.பி. முதல் வர் அகிலேஷ் சிங் யாதவை சந்தித்து, வள்ளுவர் சிலைக்கான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியும் பலன் இல்லை.

மொழிகளை இணைப்பதற்காக தேசிய அளவில் ‘பாஷா சங்கம்’ என்ற அமைப்பு 1976-ல் அலகாபாத்தில் உருவாகி சிறப்பாக நடந்து வருகிறது. இதன் சார்பில் திருவள்ளுவர், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, பாரதியார், பாரதிதாசன் என போற்றுதலுக்குரிய தமிழ்க் கவிஞர்கள் பலருக்கும் அலகாபாத் தில் விழா எடுக்கப்பட்டு மலரும் வெளியிடப்பட்டது. இதேபோல், கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட மற்ற இந்திய மொழி அறிஞர்களுக்கும் விழா எடுக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT