இந்தியா

மாட்டிறைச்சி உண்டதாக உ.பி.யில் ஒருவர் அடித்துக் கொலை

ஐஏஎன்எஸ்

உத்தரப் பிரதேசத்தில் மாட்டுக்கறியை வீட்டில் சமைத்து உண்ணதாக கிளம்பிய 'வதந்தி'யின் பேரில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதனால் ஏற்பட்ட கலவரத்தில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. பதற்றத்தை தவிர்க்க அங்கு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேச நகரான நொய்டாவைச் சேர்ந்தவர் அஃப்சல் (36). பிசாராவில் கும்பத்துடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்டில் மாட்டிறைச்சி சமைத்து உண்டதாக கூறப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து அஃப்சலை வீட்டிலிருந்து இழுத்து வந்த சில கும்பல் அவரை சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்து அங்கு வந்த போலீஸார், தொடர்புடைய கும்பலிடமிருந்து அஃப்சலை மீட்டனர். போலீஸாரை எதிர்த்து கற்கள் வீசப்பட்டன, போலீஸ் வாகனங்கள் எரிக்கப்பட்டன. உடனடியாக அஃப்சலை போலீஸார் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள நொய்டா போலீஸார் 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 4 பேரை தேடி வருவதாக குறிப்பட்டுள்ளனர்.

ஆனால் அஃப்சலை யாரும் கொல்லவில்லை என்றும் இது தொடர்பாக வதந்தி பரப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான தெளிவான தகவல் இல்லை.

SCROLL FOR NEXT