நேபாள நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்களை பாலியல் அடிமைகளாக சிறை வைத்திருந்ததாக சவுதி தூதரகத்தின் மூத்த அதிகாரி மீது புகார் எழுந்துள்ளது.
டெல்லி கோர்கான் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இது தொடர்பாக எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, "நேபாள நாட்டைச் சேர்ந்த அந்த இரண்டு பெண்களையும் சிலர் ஏமாற்றி இங்கு அழைத்து வந்துள்ளனர். நல்ல சம்பளத்துடன் சவுதி அரேபியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவர்களை அழைத்து வந்துள்ளனர். ஒருவருக்கு வயது 30, மற்றொருவருக்கு வயது 32. பின்னர் அவர்கள் இருவரையும் சவுதி தூதரகத்தின் முதன்மைச் செயலரிடம் விற்றுள்ளனர்.
இருவரையும் தலா ரூ.1 லட்சத்துக்கு விற்றுள்ளனர். 3 மாதங்களுக்கு மேலாக அவர்கள் இருவரும் சவுதி தூதரக அதிகாரியின் வீட்டில் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த விஷயம் சவுதி தூதரக அதிகாரியின் மனைவிக்கும் தெரிந்திருக்கிறது. பின்னர் அங்கிருந்து சவுதி அரேபியாவின் ஜெத்தா நகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த காலகட்டம் முழுவதும் அந்த இரு பெண்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இயற்கைக்கு புறம்பான வகையில் உறவு கொள்ளும்படி துன்புறுத்தப்பட்டுள்ளனர். சவுதி தூதரக அதிகாரி மட்டுமல்லாமல், சவுதி நாட்டைச் சேர்ந்த வேறு சிலரும் இப்பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தியுள்ளனர். பல நேரங்களில் கத்தி முனையில் அச்சுறுத்தப்பட்டு உறவு கொள்ள வற்புறுத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இருவரையும் கோர்கான் வீட்டில் இருந்து போலீஸார் மீட்டுள்ளனர். நேபாள நாட்டின் என்.ஜி.ஓ. ஒன்று அளித்த தகவலின்படி மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி தூதரகம் மறுப்பு:
இக்குற்றச்சாட்டை சவுதி தூதரகம் மறுத்துள்ளது. இது முழுக்க முழுக்க உண்மையற்ற அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என தூதரகம் தெரிவித்துள்ளது. தங்கள் நாட்டுப் பெண்கள் இருவர் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக நேபாள தூதரகமும், அப்படி ஒன்று நடக்கவே இல்லை, அதில் தங்கள் நாட்டு தூதரக அதிகாரியை குறைகூறுவது நியாயமற்றது என சவுதி தூதரகமும் கூறி வருகின்றன. இதனால், மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு புது தலைவலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பலாத்கார வழக்கு:
சவுதி தூதரக அதிகாரி மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோர்கான் போலீஸ் துணை கமிஷனர் ராஜேஷ் சேச்சி தெரிவித்துள்ளார். அதேவேளையில், குற்றச்சாட்டுக்குள்ளான தூதரக அதிகாரியும், அவரது மனைவி மற்றும் தந்தையும் அவர்களது வீட்டில் இல்லை. அவர்கள் சவுதிக்கு சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
அறிக்கை கோரியது அமைச்சகம்:
இதற்கிடையில் நடந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை அறிக்கை அளிக்குமாறு கோர்கான் போலீஸாருக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், தூதரக அந்தஸ்து இருப்பதால் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரி கைது செய்யப்பட வாய்ப்பில்லை என்றும். ஒருவேளை சவுதி அரசே முன்வந்து புகார் அளித்தால்தான் நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருப்பதாகவும் வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
'வீட்டு வேலைக்கு என்றுதான் சொன்னார்கள்'- கதறல் வாக்குமூலம்
கடந்த ஏப்ரல் மாதம் நேபாளத்தை உலுக்கிய பூகம்பத்துக்கு பிறகுதான் பாதிக்கப்பட்ட இந்த இரண்டு பெண்களும் இந்த வலையில் சிக்கியுள்ளனர். தங்களது நிலைமையை விவரித்த அப்பெண்கள், "வீட்டு வேலைக்கு என்று சொல்லிதான் எங்கள் இருவரையும் கல்பனா அழைத்து வந்தார். அவர் எங்களுக்கு ரூ.30,000 முன் பணம் அளித்தார். அப்போது அவர் எங்களிடம் பெரிய நபர் ஒருவரின் வீட்டில் வேலைக்குச் சேர்த்துவிடுவதாகக் கூறினார்.
அன்வர் என்ற நபரிடம் எங்களை ஒப்படைத்துச் சென்றார். ஆனால், அவர்கள் சொன்னது போல் ஏதும் நடக்கவில்லை. மாறாக எங்களை பணிக்கு அமர்த்திய நபர் எங்களை வன்கொடுமை செய்தார். எங்களை அடிக்கடி அறைக்குள் வைத்து பூட்டி விடுவர். சத்தம் போட்டால் கொலை செய்துவிடுவதாக கத்தியைக் காட்டி மிரட்டினர். நாங்கள் அனுபவித்த வேதனைகள் ஏராளம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாக நேபாளத்துக்கு திரும்பிச் செல்ல விரும்புகிறோம். எங்களை துன்புறுத்தியவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும்" என்றனர்.