காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம் 
இந்தியா

அண்டை நாடுகளுடன் நட்புறவில்லாமல் இருப்பது ஆபத்து: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தல்

பிடிஐ

அண்டை நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது ஆபத்தானது. காங்கிரஸ் கட்சி அண்டை நாடுகளுடன் உருவாக்கிய நட்புறவை மோடி அரசு அழித்துவிட்டது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் வெளியுறவுக் கொள்கைகளைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி விமர்சித்து வருகிறது. குறிப்பாக அண்டை நாடுகளுடான நட்புறவு மோசமாகி வருவதை மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி சுட்டிக்காட்டி வருகிறது.

ஆனால், காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டை மறுக்கும் மத்திய அரசு, அண்டை நாடுகளுடன் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுடன், உலக அளவில் நட்புறவு இந்தியாவுக்கு வலுவாக இருந்து வருகிறது எனத் தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில் 'தி எக்கானமிஸ்ட்' எனும் நாளேடு, இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான நட்புறவு பலவீனமடைந்துவிட்டது. ஆனால், வங்கதேசம் - சீனா இடையிலான நட்புறவு வலுப்பெற்று, வீரியமடைந்துள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், “பல ஆண்டுகளாக காங்கிகரஸ் கட்சி வளர்த்து, கட்டமைத்த அண்டை நாடுகளுடனான சமூக நட்புறவை பிரமதர் மோடி அழித்துவிட்டார். அண்டை நாடுகளுடன் நாம் வாழும்போது, நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நண்பர்கள் இல்லாமல் இருப்பது ஆபத்து” என அறிவுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT