பிரதமர் மோடி : கோப்புப்படம் 
இந்தியா

2015-ம் ஆண்டிலிருந்து பிரதமர் மோடி 58 நாடுகளுக்குப் பயணித்துள்ளார்; ரூ.578 கோடி செலவு: மக்களவையில் மத்திய அரசு தகவல்

பிடிஐ

2015-ம் ஆண்டிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி 58 நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்துக்காக ரூ.517 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று மக்களவையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் எழுத்துபூர்வமாக நேற்று பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''2015-ம் ஆண்டிலிருந்து பிரதமர் மோடி 58 நாடுகளுக்குப் பயணித்துள்ளார். அவரின் இந்தப் பயணத்துக்காக ரூ.517.82 கோடி செலவிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு தலா 5 முறை பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டிருந்தார்.

சிங்கப்பூர், ஜெர்மனி, பிரான்ஸ், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்குப் பலமுறை பிரதமர் மோடி பயணித்துள்ளார். பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தில் சில பயணங்கள் இரு நாட்டு அதிபர்களின் பரஸ்பர அழைப்பின் காரணமாகச் சென்றுள்ளார்.

2019-ம் ஆண்டு நவம்பர் 13-14 ஆம் தேதி கடைசியாக பிரேசில் நாட்டுக்குப் பிரதமர் மோடி மேற்கொண்டதுதான் கடைசி வெளிநாட்டுப் பயணமாகும். பிரேசலில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கச் சென்றிருந்தார்.

பிரதமர் மோடியின் பயணத்தால் இந்தியாவுடன் மற்ற நாடுகளுடன் நட்புறவு, புரிந்துணர்வு அதிகரித்துள்ளது, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளிலும், மக்களுக்கு இடையே தொடர்பு போன்றவையும் அதிகரி்த்து, வலுவடைந்துள்ளது.

பருவநிலை மாற்றம், தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கை, சைபர் பாதுகாப்பு, அணுசக்தி, சூரிய ஒளிமின்சக்தி திட்டம் போன்றவற்றில் உலக நாடுகளுடன் இந்தியா இணைந்து செயல்படுவதற்கு பிரதமர் மோடியின் பயணம் உதவியுள்ளது”.

இவ்வாறு முரளிதரன் தெரிவித்தார்.

நேபாளம் குறித்த ஒரு கேள்விக்கு அமைச்சர் முரளிதரன் பதில் அளிக்கையில், “நேபாளம் நாட்டுக்கும், இந்தியாவுக்கும் நீண்டகாலமாகவே நல்ல நட்புறவு இருந்து வருகிறது. அண்டை நாடான நேபாளம் தனித்துவமானது, சிறப்பு வாய்ந்தது.

அந்த நாட்டின் வரலாறு, பூகோள அமைப்பு, கலாச்சாரம், அந்நாட்டு மக்களுடன் இந்திய மக்களுக்கான தொடர்பு, பரஸ்பரப் பாதுகாப்பு, பொருளாதாரத் தொடர்பு அனைத்திலும் நேபாளத்துடன் ஒத்துழைத்து இந்தியா செயல்படுகிறது.

நேபாளத்தின் மூன்றில் இரு பங்கு வர்த்தகம் இந்தியாவுடன் நடக்கிறது. 90 சதவீதம் ஏற்றுமதி, இறக்குமதி அனைத்தும் இந்தியா மூலமே நடக்கிறது. இந்தியா, நேபாளம் இடையிலான நட்புறவு பரஸ்பரத்துடனே இருக்கிறது. மூன்றாவது நாடுகளுடன் நேபாளம் வைத்திருக்கும் உறவு அந்நாட்டின் தனிப்பட்ட விவகாரம்'' என்று முரளிதரன் தெரிவித்தார்

SCROLL FOR NEXT