மத்திய அரசின் விவசாய மசோதாக்களை எதிர்த்து நாடு முழுவதிலும் விவசாய சங்கங்கள் செப்டம்பர் 25 இல் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளன.
இதில் கலந்துகொள்ளவில்லை என்றாலும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின் விவசாயப் பிரிவான பாரதிய கிஸான் சங்கமும்(பிகேஎஸ்) மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் விவசாயிகள் மீதான இரண்டு முக்கிய மசோதாக்கள் தாக்கலில் எதிர்கட்சிகளிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
எதிர்ப்பை மீறி ‘வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா 2020, விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா 2020’ ஆகிய இரண்டும் இருஅவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.
இவை, குடியரசு தலைவர் ராம்நாத் கையெப்பத்துடன் சட்டமாகும் நிலையில் அவைகளுக்கு நாடு முழுவதிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
வரும் செப்டம்பர் 25 இல் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின்(எஐகேஎஸ்சிசி) தலைமையில் தேசிய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உட்பட நாடு முழுவதிலும் உள்ள சுமார் 100 விவசாய சங்கங்களும், அமைப்புகளும் இதன் உறுப்பினர்களாக உள்ளனர்.
இப்போராட்டத்தில் அரசியல் கட்சிகளின் விவசாயத் தொழில் பிரிவுகளான ஐஎன்டியுசி, ஏஐடியுசி, எச்எம்எஸ், சிஐடியு, ஏஐயுடியுசி உள்ளிட்ட அனைத்தும் கலந்து கொள்கின்றனர்.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் ஏஐகேஎஸ்சிசியின் ஒருங்கிணைப்பாளரான வி.எம்.சிங் கூறும்போது, ‘பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே அறிவித்த ‘ஒரு நாடு, ஒரு சந்தை’ என்பதன் அடிப்படையில் ஜூலை, ஆகஸ்டில் விளைந்த சோளம் விற்க முடியவில்லை.
ஒரு பல்வேறு சந்தைகளில் ரூ.600 முதல் 1000 வரை மட்டுமே விவசாயிகளால் விற்கப்பட்டது. இதை வாங்கிய மொத்த வியாபாரிகள் அவற்றை இரண்டாயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விற்று லாபம் பார்த்தனர்.
எனவே, வரும் 25 ஆம் தேதியானது ‘எதிர்ப்பு தினம்’ என அனுசரிக்கப்பட உள்ளது.’ எனத் தெரிவித்தார்.
இந்த விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றாலும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் விவசாயப் பிரிவான பிகேஎஸ், மத்திய அரசின் இரண்டு மசோதாக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றுவதற்கு முன்பாக அவற்றின் மீது நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைக்கு அனுப்ப பிகேஎஸ் அமைப்பும் எதிர்பார்த்தகாகக் கருதப்படுகிறது.
இதனால், ஏமாற்றமடைந்த பிகேஎஸ், பாஜகவின் தோழமை பிரிவாக இருந்தும் மத்திய அரசின் விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து பாஜகவின் தோழமை பிரிவான பிகேஎஸ் அமைப்பின் பொதுச்செயலாளரான மோஹினி மோகன் மிஸ்ரா கூறும்போது, ‘குறிப்பாக குறைந்தபட்ச ஆதரவு விலை(எம்எஸ்பி) நிர்ணயத்தில் எங்களது கவலை அதிகமாக உள்ளது.
இந்த மசோதாக்கள் நிறைவேற்றுவதற்கு முன்பாக நாமும் அரசிடம் சில மாற்றங்கள் செய்யுமாறு, தேசிய அளவிலான 50,000 விவசாயிகளின் கையெழுத்துடன் ஒரு கோரிக்கை சமர்ப்பித்தோம். இதை மத்திய அரசு ஏற்கவில்லை.’ எனத் தெரிவித்தார்.
இதனிடையே, காங்கிரஸ் சார்பில் மசோதாக்களை எதிர்த்து நேற்று முன்தினம் முதல் ஆங்காங்கே ஆர்பாட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது.
இதன் உச்சமாக வரும் செப்டம்பர் 28 இல் காங்கிரஸ் தலைமையில் நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்களிலும் தேசிய அளவிலான வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போராட்டம், தமிழகத்தில் திமுக தலைமையிலும், மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலும் தனித்தனியாக நடைபெற உள்ளது.
இதுவன்றி, பாஜகவின் கூட்டணிக் கட்சியான அகாலி தளம், பஞ்சாப் முழுவதிலும் என சாலை நிறுத்தப்போராட்டம் நடத்த உள்ளது.
இதனிடையே, உத்திரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் விவசாயிகள் தம் கரும்பு பயிர்களுக்கான தொகையை நிலுவையை எதிர்த்து ஏற்கனவே போராட்டம் நடத்தி வருகின்றனர்.