இந்தியா

நேதாஜி கோப்புகள்: கொல்கத்தா ஜப்பானால் குண்டு வீசித் தாக்கப்படும் என்ற அச்சம்

ஷிவ் சகாய் சிங்

மேற்கு வங்க அரசினால் வெளியிடப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்த கோப்புகளில் ஒன்றில் இரண்டாம் உலகப் போரின் போது கொல்கத்தா நகர் ஜப்பானிய படைகளால் குண்டு வீசித் தாக்கப்படும் என்ற அச்சம் நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“போர் வதந்திகள்” என்று தலைப்பிடப்பட்ட ஆவணங்களில் இத்தகவல் கிடைத்துள்ளது. கொல்கத்தா நகரம் உடனடியாகத் தாக்கப்படும் என்று அப்போதைய ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டுள்ளன. இதனால் கொல்கத்தா நகரிலிருந்து பெரிய அளவில் மக்கள் புலம் பெயர்ந்ததாகவும் ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

முனிசிபல் கார்ப்பரேஷன் ஜப்பானிய தாக்குதல் பற்றி அறிவிப்பு வெளியிட்டதோடு, நகரவாசிகள், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவிபு வெளியிட்டதாக அப்போதைய செய்தித் தாள்கள் தெரிவித்துள்ளன.

கொல்கத்தா புறநகர்ப் பகுதிகளில் ஜப்பானியர்கள் தங்கள் தாக்குதல் பற்றிய செய்திகளை துண்டுப் பிரசுரங்களாக விட்டுச் சென்றதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்த உளவுத்துறை குறிப்பு ஒன்று, “இந்தியர்களை ஜப்பானியர்கள் அன்பாக நடத்துகின்றனர், பண உதவி கூட செய்துள்ளனர். இந்தியர்களை அவர்கள் காந்தியைப் பின்பற்றுபவர்களா, போஸை பின்பற்றுபவர்களா, அல்லது பிரிட்டன் ஆதரவாளர்களா என்று கேட்டு இதில் காந்தி, போஸ் ஆதரவாளர்களுக்கு பண உதவி செய்துள்ளனர்”என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் கொல்கத்தாவிலிருந்த அமெரிக்க வங்கி ஒன்று பாம்பேயிற்கு மாற்றப்பட்டதும் ஜப்பானிய தாக்குதல் வதந்திகளை மேலும் தீவிரப்படுத்தியது. ராஷ் பிஹாரி போஸ், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் வானொலி உரைகள் ஆங்கிலத்தில் மாற்றப்பட்டு அவை ரகசிய கோப்புகளாக பாதுகாக்கப்பட்டன.

டோக்கியோ, பெர்லின், ரோம் ஆகியவற்றிலிருந்து செய்யப்படும் வானொலி ஒலிபரப்புகளை பிரிட்டிஷ் அரசாங்கம் அபாயகரமானதாக பார்த்துள்ளது.

கல்கத்தா பல்கலைக் கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் பாஸ்கர் சக்ரவர்த்தி தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு தெரிவிக்கும் போது, “1940களின் தொடக்க காலங்கள் கொல்கத்தாவில் கொந்தளிப்பு காலம் என்றே கூற வேண்டும்” என்றார்.

ஆனால் ஹாதிபாகன் உள்ளிட்ட சில பகுதிகளில் ஜப்பான் குண்டு வீசியது ஆனால் அதனால் பெரிய பாதிப்பு ஏதுமில்லை.

அவ்வாறு ஜப்பான் போட்ட வெடிகுண்டு ஒன்று போலீஸ் மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இங்குதான் தற்போது வெளியிடப்பட்ட நேதாஜி கோப்புகளும் உள்ளன.

SCROLL FOR NEXT