ஆந்திர மாநில பாஜக தலைவர் சோமு வீரராஜு சர்ச்சை ஏற்படுத்தும் கருத்து ஒன்றைக் கூறியுள்ளார். அதாவது திருப்பதி திருமலைக் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் இந்து அல்லாத பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் சுய-விவர படிவத்தை பூர்த்தி செய்த பிறகே அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமே இந்த படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுத்த பிறகுதான் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார், இந்த விதிமுறை புனிதமானது எனவே இது இந்துக்கள் அல்லாத அனைவருக்கும் பொருந்தக் கூடியது.
அதே போல் இந்துக் கடவுள்கள் பற்றி பொறுப்பற்ற முறையில் அரசியல் தலைவர்கள் பேசாமலிருக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வரும்.
சமீப காலமாக ஆந்திராவில் இந்துக்கடவுள்களை அவமதிக்கும் விதமான பேச்சுக்கள், கருத்துக்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் அமைச்சர் கோடலி வெங்கடேஸ்வர ராவ், அனுமன் பற்றி கூறிய கருத்துக்களை ஏற்க முடியாது. தெய்வ நிந்தனையான அவரது கருத்துக்களுக்கு எதிராக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சியின் போது விஜயவாடாவில் 30 கோயில்கள் இடிக்கப்பட்டன. 2015-ல் கோதாவரி புஷ்கரத்தின் போது 30 பேர் மரணமடைந்ததற்கு சந்திரபாபு நாயுடுதான் காரணம். எனவே அவருக்கு தர்மத்தைப் பற்றி பேச உரிமையில்லை” என்றார் சோமு வீரராஜு.