விவசாய மசோதக்களை எதிர்த்து ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதையடுத்து அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலைக்கு பக்கத்தில் தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலையும் இவர்களது போராட்டம் தொடர மாநிலங்களவைத் துணைத்தலைவர் ஹரிவன்ஷ் இந்த 8 எம்.பி.க்களுக்கும் தேநீர் கொண்டு வந்தார்.
ஆனால் இந்தத் தேநீர் தந்திரமெல்லாம் வேண்டாம், நீங்கள் விவசாயிகளுக்கு எதிரி என்று கூறி தேநீரை மறுத்தனர். இதனையடுத்து ஆளும் பாஜகவினர் ஹரிவன்ஷ் செய்கையை வெகுவாகப் பாராட்டிவருகின்றனர்.
பிரதமர் மோடி பாராட்டிவிட்டார், அடுத்ததாக மாநிலங்களவை தலைவரும் துணை குடியரசுத் தலைவருமான வெங்கய்ய நாயுடு, தன் ட்விட்டர் பக்கத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களுடன் ஹரிவன்ஷ் இருக்கும் படத்தைப் பகிர்ந்து, “ஞாயிறன்று ராஜ்யசபாவில் நடந்த நிகழ்வுகள் நாடாளுமன்றத்தின் கவுரவத்துக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இவற்றையெல்லாம் மீறி துணைத்தலைவர் ஹரிவன்ஷ்ஜி தானே அவர்களுக்கு தேநீர் எடுத்துச் சென்றதை கேள்விப்பட்டேன்.
ஹரிவன்ஷின் இந்த முயற்சி நம் சிறந்த ஜனநாயக மதிப்புகளை எடுத்துரைக்கிறது. அவரது செய்கை ஜனநாயகத்துக்கு நல்ல அறிகுறி” என்று பாராட்டியுள்ளார்.