இந்தியா

அயோத்தியில் நிலத்தின் விலை ஒரே மாதத்தில் 2 மடங்காக உயர்வு

செய்திப்பிரிவு

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற்றது. அதன்பின், உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்வதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும் என்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும், ‘அயோத்தியை இந்தியாவின் வாடிகன் நகரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அவர் உறுதி அளித்துள்ளார். மேலும், 3 நட்சத்திர ஓட்டல்கள், சர்வதேச விமான நிலையம் போன்ற கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கரோனா வைரஸ் பாதிப்பால், ரியல் எஸ்டேட் உட்பட அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும், அயோத்தியில் மட்டும் கடந்த ஒரே மாதத்தில் நிலத்தின் விலை 2 மடங்காகி உள்ளது.

இதுகுறித்து சொத்து தொடர்பான ஆலோசனை வழங்கி வரும் ரிஷி டாண்டன் கூறும்போது, ‘‘உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னர் அயோத்தியில் ஒரு சதுர அடி ரூ.900-க்கு சாதாரணமாக வாங்கலாம். இப்போது பூமி பூஜை நடைபெற்ற பிறகு, அயோத்தியின் வளர்ச்சி அடையாத புறநகர் பகுதிகளில் ஒரே மாதத்தில் ஒரு சதுர அடி ரூ.1000 - ரூ.1500-க்கு விற்கப்படுகிறது. நகரத்துக்குள் ஒரு சதுர அடி ரூ.2000 - ரூ.3000 ஆக அதிகரித்துவிட்டது’’ என்றார்.

மேலும், ரியல் எஸ்டேட் ஏஜன்ட் சவுரப் சிங் என்பவர் கூறும்போது, ‘‘அயோத்தியில் நில பதிவு தொடர்பான கட்டுப்பாடுகளை அரசு தற்போது விதித்துள்ளது. பல சொத்துகளில் சர்ச்சை நிலவுகிறது. சரயு நதிக்கரையோரம் மனைகள் விற்பனைக்கு என்று ஏராளமான விளம்பரங்கள் முளைத்துள்ளன. அந்த நிலங்கள் குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயமும் கண்காணித்து வருகிறது. இதற்கிடையில், சிலர் தர்மசாலா, சமூக சமையல் கூடம் போன்ற சேவைகளுக்காக முழுக்க முழுக்க மத ரீதியிலான பயன்பாட்டுக்கு நிலம் தேடி வருகின்றனர்’’ என்றார்.

அவத் பல்கலைக்கழக நிர்வாக கவுன்சலர் ஓம் பிரகாஷ் சிங் கூறும்போது, ‘‘அரசு உயரதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் என பலதரப்பினரும் அயோத்தியில் நிலம் வாங்க போட்டியில் உள்ளனர். இதனால் பினாமி சொத்துகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது’’ என்று எச்சரித்துள்ளார்.

SCROLL FOR NEXT