டிஜிட்டல் ஊடகங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு 2-வது முறையாக கோரிக்கையை விடுத்துள்ளது. சுதர்சன் டிவியில் வெளியான நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த மனுவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
இணையதளம் சார்ந்த டிஜிட்டல் ஊடகங்கள் சமூகத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில், விஷம் தோய்ந்த கருத்துகளை பரப்புகின்றன. பல சமயங்களில் தீவிரவாதத்தைத் தூண்டுவதாக இக்கருத்துகள் அமைந்து விடுகின்றன. இதனால் இணையதளம் சார்ந்த ஊடகங்களை முறைப்படுத்த நீதிமன்றம் விதிமுறைகளை வகுக்க வேண்டும். அல்லது இவற்றைக் கட்டுப்படுத்த விதிமுறைகளை வகுக்க நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது.
டிஜிட்டல் மீடியாக்களை கண்காணிக்க இதுவரை எந்த ஒரு வழிமுறையும் இல்லை. அவை விஷம் தோய்ந்த கருத்துகளை வேண்டுமென்றே பரப்புகின்றன. சில சமயங்களில் தீவிரவாத செயல்களுக்கும் துணை போகும் விதமாக அவை அமைகின்றன.
குறிப்பிட்ட தனி நபர் மற்றும் குறிப்பிட்ட நிறுவனங்கள் பற்றிய கருத்துகளை, எண்ணங்களை முற்றிலுமாக சிதைத்துவிடும் வகையில் கருத்துகளை வெளியிடுகின்றன. சுதர்சன் டிவி நிகழ்ச்சியில், முஸ்லிம்கள் அரசு பணிகளில் ஊடுருவுவதாக கருத்து வெளியிடப்பட்டதை சுட்டிக் காட்டி அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
இணைய தளம் சார்ந்த அனைத்து ஊடகங்கள், இணைய சஞ்சிகைகள், இணைய செய்தி சேனல்கள் உள்ளிட்டவற்றையும் கட்டுப்படுத்தும் வகையில் வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.