வேளாண் மசோதாக்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு கணிசமாக உயர்த்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த வேளாண் மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. மாநிலங்களவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றும்போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மசோதாவை கடுமை யாக எதிர்த்தன. இந்த மசோதா சட்டமானால், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு அரசு வழங்கும் ‘குறைந்தபட்ச ஆதரவு விலை’ என்ற நடைமுறை நிர்மூலமாகிவிடும் என அவை குற்றம்சாட்டின. கடும் அமளிக்கு இடையே 2 மசோதாக்களும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. தற்போது அவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் போராட்டம்
இந்நிலையில், இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரி வித்து பஞ்சாப், ஹரியாணா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங் களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். “விவசாயிகளுக்கு எதிராகவும் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இருக்கும் இந்த மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும்” என அவர்கள் கோரி வருகின்றனர்.
இந்தச் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் நேற்று கூடியது. இதில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, வேளாண் விளை பொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதற்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன்படி, கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இத னால், ஒரு குவிண்டால் கோதுமையின் விலை ரூ.1,975-ஆக உயர்ந்திருக்கிறது.
இதேபோல், கடுகின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டா லுக்கு ரூ.225 உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம், ஒரு குவிண்டால் கடுகின் விலை ரூ.4,650-ஆக அதிகரித்துள்ளது.
தானியங்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டா லுக்கு ரூ.225-ம், பயறு வகைகள் குவிண்டாலுக்கு ரூ.300-ம் உயர்த்தப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக, அவற்றின் விலை (ஒரு குவிண்டாலுக்கு) ரூ.5,100-ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.