ஆந்திராவில் நேற்று அதிகாலை லாரி கவிழ்ந்து விபத்துக்குள் ளானதில் 16 கூலி தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாயினர். படுகாய மடைந்த 19 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கத்திபூடி, பிரத்திபாடு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளர்கள், கடந்த மாதம் 26-ம் தேதி மேற்கு கோதாவரி மாவட்டம் சிந்தலபூடி கிராமத்துக்கு கூலி வேலைக்காக சென்றனர். இவர்களில் 35 பேர், நேற்று முன்தினம் இரவு சொந்த ஊருக்கு செல்வதற்காக ஏலூரு பைபாஸ் சாலைக்கு சென்று அந்த வழியாகச் சென்ற ஒரு லாரியில் ஏறினர்.
குவாரி கழிவுகளை ஏற்றிச் சென்ற அந்த லாரியில் 35 பேரும் பயணம் செய்தனர். நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் அதிவேகமாக சென்ற லாரி திடீரென நிலை தடுமாறி கண்டபல்லி எனும் இடத்தில் மரத்தின் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்தது.
இதனால் கூலி தொழிலாளர்கள் அனைவரும் குவாரி கழிவில் புதைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்ட உள்ளூர்வாசிகள், போலீஸா ருக்கும் தகவல் கொடுத்தனர். கிழக்கு கோதாவரி மாவட்ட எஸ்.பி. ரவி பிரகாஷ், வட்டார போக்குவரத்து அதிகாரி (ஆர்டிஓ) ஆனந்த்மற்றும் போலீஸார், தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மீட்புப் பணி வேகமாக நடைபெற்றது.
இதில் துரைபாபு, திரிநாத், கொல்ல துரை பாபு, சுரேஷ், சூரி, சிவகிருஷ்ணா, கொண்டபாபு, திருமூர்த்துலு, சத்யநாராயணா, புரந்தாசு வீரபாபு, சூரிபாபு, வெங்கண்ணா, கர்ல சூரிபாபு, நாகபாபு, ராம்பாபு, பாப்ஜி உட்பட 16 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
படுகாயமடைந்த 19 பேர், ராஜமுந்திரி அரசு மருத்துவ மனை மற்றும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது.
லாரி ஓட்டுநர் தூங்கியதே விபத்துக்கு முக்கியக் காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஓட்டுநர் போகி சீனு என்பவர் விசாகப்பட்டினம் நக்கனபல்லி போலீஸ் நிலையத் தில் சரணடைந்தார். அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ரூ.2 லட்சம் நிவாரணம்
விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவித்தார். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.