இந்தியா

தினமும் பிரதமர் அலுவலகத்துக்கு முடி, நகத்தின் மாதிரிகள் அனுப்பி வைக்கப்படும்: ஐக்கிய ஜனதா தளம் அறிவிப்பு

ஐஏஎன்எஸ்

முதல்வர் நிதிஷ்குமாரின் மரபணு பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தினமும் ஒரு லட்சம் முடி, நகத்தின் மாதிரிகள் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி பிஹார் மாநிலம் முசாபர்புரில் நடந்த பொதுக் கூட்டத்தில், பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, ‘‘முதல்வர் நிதிஷ்குமாரின் மரபணுவில் ஏதோ கோளாறு இருப்பதாக தெரிகிறது. ஏனெனில் ஜனநாயக மரபணு அப்படி இல்லை. இந்த ஜனநாயகத்தில் அரசியல் எதிரியாக இருந்தாலும் மதிப்பளிக்க வேண்டும்’’ என்று பேசினார்.

மோடியின் பேச்சுக்கு நிதிஷ்குமார் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர்என்.கே.ஆர்யா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வியாழக்கிழமை (நேற்று) முதல் தினமும் 1 லட்சம் முடி, நகத்தின் மாதிரிகளை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைப்போம். இதற்காக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி தலைவர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்களிடம் மாதிரிகளை சேகரித்து வருகிறோம். இதுவரை 10 லட்சம் மாதிரிகளை ஏற்கெனவே சேகரித்து விட்டோம். அக்டோபர் 15-ம் தேதிக்குள் 50 லட்சம் மரபணு மாதிரிகளை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு ஆர்யா கூறினார்.

SCROLL FOR NEXT