பிஹார் சிறையில் அடைக்கப்பட் டுள்ள அரசியல் மற்றும் செல்வாக்கு மிக்க கைதிகள் மினரல் வாட்டர், ஸ்மார்ட்போன், சிகரெட், பணம் என சகல வசதிகளுடன் சொகுசாக வாழ்வது அம்பலமாகியுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், பிரச்சாரத்தை சிறைக்குள் இருந்தே இவர்கள் திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றனர்.
பிஹார் பேயுர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் பலர் குற்றப்பின்னணி கொண்ட அரசியல்வாதிகள், அரசியல் தொடர்புடைய தாதாக்கள்.
பிஹார் தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், சிறையி லிருந்தபடியே மொபைல் மூலம் தேர்தல் பிரசாரங்களுக்கு உதவுதல், வாக்காளர்கள் மீது ஆதிக்கம் செலுத்துதல், அரசியல் எதிரிகளைப் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக தகவல் வெளியானது. இதையடுத்து, பாட்னா காவல் துறையினர் பேயுர் சிறையில் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், மொபைல் போன்கள், சிம்கார்டுகள், சார்ஜர்கள், பணம், கூர்மையான ஆயுதங்கள், சிகரெட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. சிறைக்குள் கைதிகள் வசதியாக வாழ்ந்துள்ளனர்.
பாட்னா காவல் துறை கண் காணிப்பாளர் விகாஸ் வைபவ் கூறும்போது, “செல்வாக்கு மிக்க சிறைக்கைதிகள் சிலரிடமிருந்து தடை செய்யப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன” என்றார்.
“கிரிமினல்களாக இருந்து அரசியல்வாதிகளாக மாறிய அனந்த் சிங், சுனில் பாண்டே, ரித்லால் யாதவ், தாதா பிந்து சிங், கொலைக்குற்றத்துக்காக தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் அமைச்சர் விஜய் கிருஷ்ணா ஆகியோர் அடைக்கப் பட்டிருந்த சிறை அறைகளில் சோதனை நடத்தப்பட்டது. இவர் கள் சிறைக்குள் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். ஸ்மார்ட் போன்கள், வெளியிலிருந்து வரவழைக்கப்பட்ட பாட்டில் குடிநீர், சிகரெட், மது, பணம் என எல்லாவிதமான வசதி களுடனும் அவர்கள் வாழ்கின்றனர்” என சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அனந்த் சிங், ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏ ஆவார். இம்மாத தொடக்கத்தில் அக்கட்சியிலிருந்து விலகி விட்டார். இவரின் ஆள்பலம் மற்றும் பண பலம் காரணமாக ‘சோட்டா சர்க்கார்’ என அழைக்கப்படுகிறார். ஆள் கடத்தல் மற்றும் கொலை வழக்குக்காக கைது செய்யப்பட்ட இவரின் பழைய வழக்குகளும் திரும்ப விசாரிக்கப்படுகின்றன. வரும் தேர்தலில் தற்போது எம்எல்ஏவாக இருக்கும் மொகாமா தொகுதியிலேயே சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்திருக்கிறார்.
சுனில் பாண்டே, ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் எம்எல்ஏ ஆவார். தாதா ஒருவரை தப்பிக்க வைத்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். கொலை, ஆள்கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவரும் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
தாதாவாக இருந்து சுயேச்சை யாக போட்டியிட்டு மேலவை எம்எல்ஏ ஆகியுள்ள ரித்லால் யாதவ் மீது கொலை குற்றம் உள்ளிட்ட தீவிர வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவரோ அல்லது இவரின் மனைவியோ வரவிருக்கும் தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் சார்பில் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
முன்னாள் அமைச்சரான விஜய் கிருஷ்ணா, லாலு பிரசாத் யாதவுக்கு நெருக்கமானவர் எனக் கூறப்படுகிறது.
“பேயுர் சிறை மட்டுமின்றி, கயா, பகல்புர், முஸாபர்புர் மத்திய சிறைகளிலும் கைதிகள் மொபைல் போன் பயன்படுத்துவது வெகு சாதாரணம்.
மது, பாட்டில் குடிநீர், மொபைல் போன், ஆபாசப்படம் ஆகிய வசதி களை அனுபவிக்க, சிறை அதிகாரி களுக்கும், காவலர்களுக்கும் லஞ்சம் கொடுத்தால் போதும்” என சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.