குறைந்தபட்ச ஆதரவு விலையும், மண்டிகளும் தொடரும் என பிரதமர் மோடி ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளதால் விவசாயிகள் மசோதா கொண்டு வரப்பட்டால் விவசாயிகளுக்கு கூடுதல் பலன் கிடைக்கும் என ஹரியாணா அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அனில் விஜ் கூறினார்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
இந்த வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிரோன்மணி அகாலிதளம் கட்சியும் வேளாண் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து மக்களவையில் நடந்த வாக்கெடுப்பிலும் எதிராக வாக்களித்தது.
அதுமட்டுமல்லாமல் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது மத்திய அமைச்சர் பதவியை அகாலிதளம் கட்சி எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில் விவசாயிகள் நலனுக்காக எதிராக இருப்பதாகக் கூறப்படும் இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடரந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ஹரியாணா அமைச்சர் அனில் விஜ் கூறியதாவது:
‘‘குறைந்தபட்ச ஆதரவு விலையும், மண்டிகளும் தொடரும் என பிரதமர் மோடி ஏற்கெனவே தெளிவுபடுத்தி விட்டார். எனவே தற்போது விவசாயிகள் யாரிடம் விற்பனை செய்து வருகிறார்களோ அதனை தொடர முடியும். இதுமட்டுமின்றி வேறு சிலரிடமும் விவசாயிகள் விற்பனை செய்ய முடியும். அவர்கள் தாங்கள் விரும்பிய நபர்களிடம் விற்பனை செய்து கொள்ளலாம். ஆனால் இந்த மசோதா அமலுக்கு வந்தால் விவசாயிகள் கார்பரேட் நிறுவனங்களின் கூலிகளாக மாறி விடுவார்கள் என அரவிந்த் கேஜ்ரிவால் பிரச்சாரம் செய்கிறார். இதனை அவரால் நிருபிக்க முடியுமா.’’ எனக் கூறினார்.