கோப்புப்படம் 
இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் கரோனா தொற்று பாதிப்பை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: பாதிப்பு 53 லட்சத்தைக் கடந்தது: 85 ஆயிரத்துக்குமேல் உயிரிழப்பு

பிடிஐ

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களைவிட, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பு 53 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 93 ஆயிரத்து 337 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 53 லட்சத்து 8 ஆயிரத்து 14 ஆக அதிகரித்துள்ளது.

ஆனால், இதுவரையில்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களைவிட குணமடைந்தோர் அதிகரித்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவிலிருந்து 95 ஆயிரத்து 880 பேர் குணமடைந்துள்ளனர் ஆனால், புதிதாக 93,337 பேர் பாதி்க்கப்பட்டனர்.

இதன் மூலம் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 42 லட்சத்து 8 ஆயிரத்து 431 ஆகஅதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து மீண்டோர் சதவீதம் 79.28 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 லட்சத்து 13 ஆயிரத்து 964 ஆக அதிகரி்த்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 19.10 சதவீதமாக இருக்கிறது.
கரோனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,247 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் பலியானோர் எண்ணிக்கை 85 ஆயிரத்து 619 ஆக அதிகரி்த்துள்ளது, உயிரிழப்பு சதவீதம் 1.61 ஆக குறைந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தை எட்டிய நிலையில், 23-ம் தேதி 30 லட்சத்தையும், இம்மாதம் 5-ம் தேதி 40 லட்சத்தையும், 16-ம் தேதி 50 லட்சத்தையும் எட்டியது.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 440 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் 179 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 98 பேரும், ஆந்திரா, தமிழகத்தில் 67 பேரும், பஞ்சாபில் 62 பேரும், மேற்கு வங்கத்தில் 59 பேரும், புதுச்சேரியில் 31பேரும், டெல்லியில் 30 பேரும் உயிரிழந்தனர்.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை 6 கோடியே 24 லட்சத்து 54 ஆயிரத்து 254 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 8 லட்சத்து 81 ஆயிரத்து 911 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT