பாபர் மசூதி இடிப்பு வழக்கைவாபஸ் பெற்று குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என முக்கிய மனுதாரரான இக்பால் அன்சாரி கோரியுள்ளார்.
இதுகுறித்து இக்பால் அன்சாரி ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, "பாபர் மசூதி நிலப் பிரச்சினை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. அதன் பிறகு அம்மசூதி மீதான அனைத்து பிரச்சினைகளும் முடிந்து விட்டன. எனவே, அந்த மசூதி இடிப்பு வழக்கை வாபஸ் பெற்று, குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும்" என்றார்.
இதற்கான காரணமாக இக்பால்அன்சாரி கூறும்போது, “மதச்சார்பற்ற நம் ஜனநாயக நாட்டில் இந்து,முஸ்லிம் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். இதைக்குலைப்பதற்கான சூழலை இனிஏற்படுத்தக் கூடாது. பிரச்சினைக்குரிய நிலம் அனைத்தும் இந்து தரப்புக்கு அளிக்கப்பட்டு ராமர் கோயிலுக்கான பணிகளும் அங்கு தொடங்கிவிட்டன. இந்நிலையில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை தண்டிப்பது சரியல்ல” என்றார்.
30-ம் தேதி தீர்ப்பு
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி,கடந்த டிசம்பர் 6, 1992-ல் இடிக்கப்பட்டது. இதற்கு காரணமானவர்கள் என பாஜகவின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினய் கட்டியார், கல்யாண் சிங்உள்ளிட்ட 32 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. உ.பி.யின் ரேபரேலியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கின் தீர்ப்பு வரும் 30-ம் தேதி வெளியாக உள்ளது. இச்சூழலில், அயோத்தியின் பாபர் மசூதி நிலப்பிரச்சினை வழக்கின் முக்கிய மனுதாரராக இருந்த இக்பால் அன்சாரி இக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
28 வருடங்களுக்கு முன்பு மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணை கடந்த 1-ம் தேதி முடிந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்ட 49 பேரில் 17 பேர் இறந்து விட்டனர்.
மீதியுள்ள 32 பேரில் மூத்ததலைவர்கள் மற்றும் கரசேவகர்கள் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதன் தீர்ப்பு வெளியாகும் தினத்தன்று குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி எஸ்.கே.யாதவ் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.