மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் மசோதாக்கள் விவசாயிகள் நலனுக்கு எதிரானது என எதிர்ப்புத் தெரிவித்து, சிரோன்மணி அகாலிதளம் எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து அளித்த கடிதத்தைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.
மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சராக ஹர்சிம்ரத் கவுர் இருந்து வந்த நிலையில், இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திடீரென ராஜினாமா செய்தார்.
அதுமட்டுமல்லாமல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலும் அகாலிதளம் இடம் பெற்றிருந்த நிலையில் கவுரின் ராஜினாமா கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. மத்தியில் அமைந்துள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சிரோன்மணி அகாலிதளம் கட்சியும் வேளாண் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இந்த மசோதாக்களுக்கு எதிராக மக்களவையில் நடந்த வாக்கெடுப்பிலும் சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் எம்.பி. சுக்பிர்சிங் பாதல், அவரின் மனைவியும் மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் எதிராக வாக்களித்து, நேற்று அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
அதுமட்டுமல்லாமல் இந்த மசோதாக்களுக்குத் எதிர்ப்புத் தெரிவித்து தனது மத்திய அமைச்சர் பதவியை ஹர்சிம்ரத் கவுர் நேற்று ராஜினாமா செய்து குடியரசுத் தலைவருக்கு கடிதத்தை அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமாவை ஏற்பதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “பிரதமர் மோடியின் ஆலோசனையின்படி, மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுரின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் உடனடியாக ஏற்றுக்கொண்டார்
மேலும், மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூடுதலாக ஹர்சிம்ரத் கவுர் வகித்து வந்த உணவு பதப்படுத்தும் தொழில்துறையைக் கவனிப்பார் என்று பிரதமர் மோடி அளித்த ஆலோசனையையும் குடியரசுத் தலைவர் ஏற்று கூடுதல் பொறுப்பும் அளிக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஏற்கெனவே வேளாண் துறை மற்றும் விவசாயிகள் நலன் , கிராமப்புற மேம்பாட்டு, பஞ்சாயத்து ராஜ் ஆகியவற்றைக் கவனித்து வருகிறார். தற்போது கூடுதலாக உணவுப் பதப்படுத்தும் துறையும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில், “விவசாயிகளுக்கு எதிரான அவசரச் சட்டங்களுக்கும், மசோதாக்களுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். விவசாயிகளின் மகளாக, சகோதரியாக அவர்களுடன் இணைந்து நிற்பதில் பெருமை கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.