கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில், அமைச்சர் ஜலில் பெயரும் அடிபடுகிறது. அவர் பதவி விலக கோரி, பாஜக தொண்டர்கள் கொச்சியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்து அழைத்து சென்றனர். படம்: பிடிஐ 
இந்தியா

கேரளாவுக்கு தங்கம் கடத்திய வழக்கு: அமைச்சர் பதவி விலகக் கோரி 6-வது நாளாக தொடர் போராட்டம்

செய்திப்பிரிவு

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அந்நாட்டு தூதரகத்துக்கு விமானம் மூலம் 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்ட விவகாரம் கேரளாவில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளர் சிவசங்கர் பணி நீக்கம் செய்யப்பட்டார். தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தங்க கடத்தல் தொடர்பாக மாநில உயர் கல்வி அமைச்சர் ஜலீல் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் அமீரக தூதரகம் மூலம் அனுமதியின்றி குரான் புத்தகம் மற்றும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ததும் தெரிய வந்தது. அவரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கொச்சியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் ஜலீல் நேற்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், ஜலீல் பதவி விலகக் கோரி காங்கிரஸ், பாஜக கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தின் பல பகுதிகளிலும் நேற்று 6-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடந்தது. திருவனந்தபுரம், கோட்டயம், கொச்சி, திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய இடங்களில் கரோனா விதிமுறைகளை மீறி ஏராளமானோர் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் பல பகுதிகளில் மோதல் ஏற்பட்டது. கல்வீச்சில் போலீஸாரும் தடியடியில் போராட்டக்காரர்கள் பலரும் காயமடைந்தனர். பாலக்காட்டில் காங்கிரஸ் எம்எல்ஏ பலராம் உட்பட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்க போலீஸார் தண்ணீரை பீய்ச்சியடித்து தடியடி நடத்தினர்.

இடதுசாரிக் கட்சிகள் அமைச்சர் ஜலீலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT