பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், ராம்விலாஸ் பாஸ்வானின் கட்சி போட்டியிடும் 40 தொகுதிகளிலும் தம் வேட்பாளர்களை நிறுத்துகிறார் அவரது மருமகன் அணில் குமார் சாது.
மத்திய அமைச்சரான ராம்விலாஸ் பாஸ்வானின் கட்சி லோக்ஜனசக்தி. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினரான பாஸ்வானுக்கு பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 40 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கிட்டியுள்ளது.
இதில், பிஹாரின் ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ள குதும்பா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வந்தார் பாஸ்வானின் மருமகனான அணில் குமார் சாது.
ஆனால், அணில் போட்டியிட விரும்பிய தொகுதி பிஹாரின் மற்றொரு தலீத் கட்சியின் தலைவரான ஜிதன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சாவிற்கு ஒதுக்கப்பட்டு விட்டது. இதனால், குதும்பாவை பாஸ்வானால் தன் மருமகன் அணிலுக்கு ஒதுக்க முடியவில்லை.
இதன் காரணமாக, பாஸ்வான் மீது கடும் கோபம் கொண்ட அணில், "எனக்கு போட்டியிட வாய்ப்பளிக்காததன் மூலம் கட்சியின் உண்மையான தொண்டர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்" எனக் கூறி தம் தலீத் சேனாவின் சார்பில் லோக்ஜனசக்தி போட்டியிடும் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து ‘தி இந்து’விடம் லோக்ஜனசக்தியின் செய்தி தொடர்பாளரான லல்லன் சந்திரவன்ஷி கூறுகையில், ‘போட்டி வேட்பாளர்களை நிறுத்துவதாக அறிவித்ததன் மூலம் அணில் குமார் சாது கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுவிட்டார்.
இதற்காக அவரை கட்சியிலிருந்து ஆறு வருடங்களுக்காக நம் தலைமை நீக்க முடிவு செய்துள்ளது. இவருக்கு உதவியாக இருந்த நகினா தேவியையும் கட்சியில்லிருந்து ஆறு வருடங்களுக்கு நீக்குகிறது.’ எனக் கூறுகிறார்.
எனினும், பாஸ்வானின் ஆதரவாளர்கள் அணில் குமார் சாதுவை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இவர் பாஸ்வானின் மகளான ஆஷா பாஸ்வானின் கணவர் ஆவார். இவர் லோக்ஜனசக்தியின் தலீத் சேனாவின் பிஹார் மாநிலத் தலைவராகவும் இருக்கிறார்.
இதற்கிடையே, லோக்ஜனசக்தியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ராமன்சிங், தம் குடும்ப உறுப்பினர்களுக்கு போட்டியிட வாய்ப்பளித்த தங்கள் கட்சியை ஒரே குடும்பத்தின் கட்சியாக்கிவிட்டார் பாஸ்வான் எனப் புகார் கூறியுள்ளார். பிஹார் மாநில சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் 12 முதல் ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.