இந்தியா

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு: இமாச்சல் முதல்வர் வீட்டில் சிபிஐ சோதனை - பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் குற்றச்சாட்டு

பிடிஐ

இமாச்சலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் (காங்கிரஸ்) வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு சொந்தமான 11 இடங் களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இது பழி வாங்கும் நடவடிக்கை என காங் கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

சிம்லாவில் முதல்வர் இல்லத்தில் வசித்து வரும் சிங், தனது 2-வது மகளின் திருமணத் துக்காக நேற்று காலை 7.30 மணிக்கு வீட்டை விட்டு புறப் பட்டுச் சென்றார். அடுத்த சில நிமிடங் களில் சிபிஐ அமைப்பின் 18 பேர் அடங்கிய குழுவினர் 5 வாகனங் களில் வந்திறங்கினர். அவர்கள் முதல்வரின் இல்லத்தில் சோதனை நடத்தினர். சிம்லா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அவருக்கு சொந்தமான 11 இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

81 வயதாகும் சிங், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் உருக்குத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.6.1 கோடி மதிப்பிலான சொத்துகளை சேர்த்து காப்பீடு திட்டத்தில் முதலீடு செய்ததாக புகார் எழுந்தது.

சிங், அவரது மனைவி பிரதிபா சிங், மகன் விக்ரமாதித்ய சிங், மகள் அபராஜிதா சிங் மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு (எல்ஐசி) நிறுவன முகவர் ஆனந்த் சவுகான் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிம்லாவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட் டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறும் போது, “காங்கிரஸ் கட்சியின் மீதும் அதன் தலைவர்கள் மீதும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் அரங்கேற்றப்படுகின்றன” என்றார்.

SCROLL FOR NEXT