இந்தியா

கேரளாவில் முதல்முறையாக 4 ஆயிரத்தைத் தாண்டிய தொற்று: முதல்வர் பினராயி விஜயன் கவலை

கா.சு.வேலாயுதன்

கேரளாவில் இன்று 4,351 பேருக்குக் கரோனா தொற்று பரவியுள்ளது என்றும் 10 பேர் மரணமடைந்துள்ளதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

''கேரளாவில் நாளுக்கு நாள் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று மிக அதிகமாக 4,351 பேருக்கு நோய் பரவி உள்ளது. இன்றுதான் முதல் முறையாக நோயாளிகள் எண்ணிக்கை நான்கு ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. எனவே நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நோய் பாதிப்பில் இன்றும் திருவனந்தபுரம் மாவட்டம்தான் முதலிடத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில் இன்று 820 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் 721 பேருக்குக் கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவி உள்ளது. இவர்களில் 83 பேருக்கு எப்படி நோய் பரவியது என்று தெரியவில்லை.

திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக 545 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், 383 எர்ணாகுளம் மாவட்டத்தையும், 367 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், 351 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 319 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 296 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், 260 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 241 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 218 பேர் கொல்லம் மாவட்டத்தையும், 204 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், 136 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும், 107 பேர் வயநாடு மாவட்டத்தையும், 104 பேர் இடுக்கி மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இன்று நோயாளிகள் எண்ணிக்கை 6 மாவட்டங்களில் 300-ஐத் தாண்டி உள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவுவது அதிகரித்து வருகிறது. நேற்று வரை ஒரு வாரத்தில் இந்த மாவட்டத்தில் மட்டும் 30,281 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 4,184 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டது. கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருப்பதின் மூலம் நோய் அதிகமாக வருவதால் கர்ப்பிணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் வீட்டில் சுய தனிமையில் இருக்க வேண்டும்.

கரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 10 பேர் இன்று மரணமடைந்துள்ளனர். இதையடுத்து இதுவரை கேரளாவில் கரோனா பாதித்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 489 ஆக உயர்ந்துள்ளது. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 57 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 141 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்துள்ளவர்கள் ஆவர். கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 4,081 பேருக்கு நோய் பரவி உள்ளது. இதில் 351 பேருக்கு நோய் எப்படிப் பரவியது எனத் தெரியவில்லை. சுகாதாரத் துறையைச் சேர்ந்த 72 பேருக்கும் இன்று நோய் பரவி உள்ளது.

கரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 2,737 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 87,345 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 34, 314 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது 2,13,595 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 1,89,759 பேர் வீடுகளிலும், 23,836 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். கரோனா நோய் அறிகுறிகளுடன் இன்று 3,081 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 45,730 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. சிபிநாட், ட்ரூநாட் உள்பட இதுவரை மொத்தம் 22,87,796 பல்வேறு வகையான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளி மாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கம் உள்ள 1,92,765 பேரிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன''.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT