அறியாமையால், நம் படைகள் குறித்து தவறான தகவல்களை சீன ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன என்று இந்திய ராணுவத்தின் வடக்குமண்டலப் பிரிவு தெரிவித்துள்ளது.
எல்லையில் போர் நடந்தால் அதை எதிர்கொள்வதற்கு இந்தியப் படைகள் தயாராக இல்லை என்று சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன, இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தின் வடக்கு மண்டலம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
இந்தியா அமைதியை விரும்பும் நாடு. அனைத்து அண்டை நாடுகளுடனும் நட்புடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். பிரச்னைகளுக்கு பேச்சின் மூலம் தீர்வு காண வேண்டும் என்பதே, நம்முடைய கொள்கை.அதே நேரத்தில், லடாக் எல்லையில் போர் ஏற்படும் சூழ்நிலையை சீனா ஏற்படுத்தினால், அதை எதிர்கொள்ள நம் படைகள் முழுமையாக தயாராக உள்ளன. இந்திய வீரர்கள், மனதளவிலும், உடலளவிலும் எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ள முழு அளவில் தயாராக உள்ளனர்.
சீன ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் நகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இதுபோன்ற கரடுமுரடான பாறைகள் உள்ள மலைப் பகுதியை சந்தித்திருக்க மாட்டார்கள். மேலும், எந்தளவுக்கு குளிர் சீதோஷ்ண நிலை இருந்தாலும், அதை சமாளித்து, எதிரிகளின் சவால்களை முறியடிக்கும் திறனை நம் வீரர்கள் பெற்றுள்ளனர்.ஆனால், அறியாமையால், நம் படைகள் குறித்து தவறான தகவல்களை சீன ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.