வேலைவாய்ப்பு என்பது மக்களுக்குக் கவுரவம். இன்னும் எத்தனை காலத்துக்கு மக்களுக்கு வழங்காமல் அரசு மறுக்கும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தாதது, பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை ஆகியவை குறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி மத்திய அரசைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
காங்கிஸ் தலைவர் சோனியா காந்தியின் மருத்துவச் சிகிச்சைக்காக அவருடன் ராகுல் காந்தியும் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். இந்த வார இறுதியில்தான் தாயகம் திரும்புவார் எனக் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் இருந்தபோதிலும், தொடர்ந்து மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஊடகம் ஒன்றின் அறிக்கையை இணைத்துப் பதிவிட்டுள்ளார்.
அதில், நாட்டில் அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேல் அதிகரித்துவிட்டது. ஆனால், அரசு வேலைவாய்ப்புத் தளத்தில் 1.77 லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், “மிகப்பெரிய வேலையின்மைச் சூழலால் நமது இளைஞர்கள் இன்றைய தினத்தை தேசிய வேலையின்மை நாளாக அழைக்கிறார்கள். வேலைவாய்ப்பு என்பது கவுரவம். எத்தனை காலத்துக்கு அரசு மக்களுக்கு வழங்காமல் மறுக்கப்போகிறது” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.