இந்தியா

தேநீர்க் கடையில் மாட்டிறைச்சி விற்பனை செய்தவரைத் தாக்கியதற்காக ரூ.1 லட்சம் இழப்பீடு: அசாம் அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

பிடிஐ

அசாம் மாநிலம் பிஸ்வாநாத் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய ஹோட்டலில் மாட்டிறைச்சி சமைத்து விற்ற கடையின் உரிமையாளரை ஒரு கும்பல் தாக்கியதற்காக பாதிக்கப்பட்டநபருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் அசாம் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அந்தக் கடையின் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சத்தை 6 வாரத்துக்குள் வழங்கி, வழங்கப்பட்டதற்கான சான்றையும் இணைத்து, அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. 14 வயதான கால்நடைகளை முறைப்படி கால்நடை மருத்துவரின் அனுமதி பெற்று இறைச்சிக்காக வெட்ட மட்டுமே அனுமதி உண்டு.

பிஸ்வாநாத் மாவட்டம் மதூப்பூர் நகரில் சிறிய ஹோட்டலுடன் கூடிய தேநீர்க் கடையை நடத்தி வந்தவர் சவுகத் அலி (வயது 48). கடந்த ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி சவுகத் அலி, தனது தேநீர்க் கடையில் மாட்டிறைச்சியைச் சமைத்து விற்பனை செய்ததை அறிந்த ஒரு கும்பல் அவரின் கடைக்குள் புகுந்து அவரைக் கடுமையாகத் தாக்கியது.

மாட்டிறைச்சியை விற்பனை செய்ததைக் கண்டித்த அந்தக் கும்பல் சவுகத் அலியையும், அவருக்குக் கடையை வாடகைக்குக் கொடுத்த உரிமையாளரையும் தாக்கியது.

இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்தபோது, அங்கு போலீஸாரும் இருந்தனர். மேலும், சவுகத் அலியைத் தாக்கியது மட்டுமல்லாமல் அனைவரின் முன்பும் பன்றிக்கறியையும் சாப்பிடக் கட்டாயப்படுத்தியுள்ளது அந்தக் கும்பல்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வைரலானது. சவுகத் அலி தாக்கப்பட்டது குறித்து அவரின் சகோதரர் சகாபுதின் அலி மறுநாள் போலீஸில் புகார் அளித்தார்.

அப்போது மக்களவைத் தேர்தல் நடைபெறும் சூழலில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை அசாமில் உருவாக்கியது, சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. இதையடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க முதல்வர் சர்பானந்த சோனாவால் உத்தரவிட்டதைத் தொடர்ந்து பாஜக நிர்வாகி உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

அசாம் முதல்வர் சர்பானந்த சோனாவால்: கோப்புப்படம்

இந்தச் சம்பவம் குறித்து மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேபாபிரத்தா சயிகா, தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுத்த தேசிய மனித உரிமை ஆணையம், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாநில காவல் டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால், எந்தவிதமான அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்தார்.

இதனால் மாநிலத் தலைமைச் செயலாளருக்கும், காவல் டிஜிபிக்கும் நோட்டீஸ் அனுப்பி மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை கேட்டது. ஆனால், தலைமைச் செயலாளரும், காவல் டிஜிபியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை, அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை.

இதையடுத்து, இதைத் தீவிரமாக எடுத்துக் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம், காவல் டிஜிபிக்கும், தலைமைச் செயலாளருக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது.

அதில், “மாட்டிறைச்சி விற்பனை செய்தவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யக்கோரி நோட்டீஸ் அனுப்பியும் எந்தவிதமான அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை.

பாதிக்கப்பட்ட நபர் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். மதத்தின், சாதியின் அடிப்படையில் அவருக்கு அவமதிப்பு நடந்துள்ளது. இது முழுமையான மனித உரிமை மீறல். சில உள்ளூர் இளைஞர்களை வைத்து அரசு அதிகாரி வரி வசூலித்ததும் சட்டவிரோதமானது.

ஆதலால், மாநிலத்தின் தலைமைச் செயலாளர், அசாம் அரசு, உடனடியாக பாதிக்கப்பட்ட நபர் சவுகத் அலிக்கு ரூ.1 லட்சத்தை நிவாரணமாக வழங்கிட வேண்டும். இந்த நிவாரணத்தை 6 வாரங்களுக்குள் வழங்கி, வழங்கப்பட்டதற்கான சான்றையும், சம்பவம் குறித்த அறிக்கையும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அறிக்கையாக 6 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டது.

அதுமட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட நபரைத் தாக்கியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன, விசாரணை நிலவரம் ஆகியவை குறித்து காவல் டிஜிபி அடுத்த 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT